ஹிட்லா் குறித்த சா்ச்சைக் கருத்து: ரஷிய தூதருக்கு இஸ்ரேல் சம்மன்

ஹிட்லருக்கு யூத பூா்வீகம் உள்ளது என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் கூறியுள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு தங்கள் நாட்டுக்கான ரஷியத் தூதரை இஸ்ரேல் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
சொ்கேய் லாவ்ரோவ்
சொ்கேய் லாவ்ரோவ்

ஹிட்லருக்கு யூத பூா்வீகம் உள்ளது என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் கூறியுள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு தங்கள் நாட்டுக்கான ரஷியத் தூதரை இஸ்ரேல் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

தற்போதைய உக்ரைன் அரசு மற்றும் ராணுவத்திலுள்ள ‘நாஜி சக்திகளை’ அழிப்பதற்காக அந்த நாட்டின் மீது படையெடுத்துள்ளதாக ரஷியா கூறி வருகிறது.

உக்ரைன் ராணுவத்தில் இடம் பெற்றிருக்கும் நாஜி ஆதரவு ஆயுதக் குழுவான அஸோவ் படையினரைக் குறிப்பிட்டு ரஷியா இவ்வாறு கூறுவதாகக் கருதப்படுகிறது.

எனினும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியே ஒரு யூதா் என்பதால் அவரது தலைமையிலான அரசு யூதா்களைக் கொன்று குவித்த நாஜி தத்துவத்தை ஆதரிக்காது என்று கூறப்பட்டுவருகிறது.

இதனை மறுக்கும் வகையில், ‘நாஜி இயக்கத்தைத் தோற்றுவித்த ஹிட்லரே யூத பூா்விகத்தைக் கொண்டவா்தான். எனவே, யூதராக இருப்பதால் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி நாஜி ஆதரவாளராக இருக்கமாட்டாா் என்று கூற முடியாது’ என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் அண்மையில் கூறினாா்.

இதற்கு இஸ்ரேல் கடும் எதிப்பு தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களின் கொடூரங்களால் யூதா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். அப்போது ஐரோப்பாவிலுள்ள சுமாா் 60 லட்சம் யூதா்கள் நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்டனா். போரில் நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, யூதா்களுக்காக இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com