இந்த நாளில் அன்று.. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் அனுபவம்

கடந்த 2021ஆம் ஆண்டு உலகமே கரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயைப் பற்றிய செய்தியும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நாளில் அன்று.. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் அனுபவம்
இந்த நாளில் அன்று.. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் அனுபவம்

கடந்த 2021ஆம் ஆண்டு உலகமே கரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயைப் பற்றிய செய்தியும் பெரிய அளவில் பேசப்பட்டது.

2021ஆம் ஆண்டு இதே நாளில்தான், மாலி நாட்டைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸி, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 9 குழந்தைகளும் உயிருடன் ஆரோக்கியமாக இருந்தது ஆச்சரியத் தகவலாகப் பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹலிமா சிஸ்ஸி. 25 வயதாகும் இவர், 2020ஆம் ஆண்டு கர்ப்பமுற்றார். அவரை ஸ்கேன் செய்து பார்த்த போது, 7 குழந்தைகள் அவரது வயிற்றில் இருப்பதாகக் கண்டுபிடித்தனர் மருத்துவர்கள். இந்த தகவல் ஊர் முழுக்க பரவி அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை முறையாக வழங்க மாலி அரசும் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் பிரசவவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எல்லோரும் 7 குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பார்ப்புக்கு மேலாக 9 குழந்தைகள் பிறந்தன. இது அங்கிருந்த ஒட்டுமொத்த மருத்துவக் குழுவுக்கும் ஆச்சரியமாக அமைந்தது. பிறந்த 9 குழந்தைகளில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆகும்.

சிறந்த சிகிச்சையின் காரணமாக தாயும் , சேயும் நலமாக இருந்தனர். இதற்கிடையே, இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை நிகழ்வாக பார்க்கப்பட்டது. 

இதற்கு முன், அமெரிக்காவைச் சேர்ந்த நாடியா சுலேமான் என்பவர் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அப்போது பேசிய மாலி சுகாதாரத்துறை அமைச்சர் பாண்டா சிபி, ""ஐந்து சிறுமிகளும் நான்கு சிறுவர்களும், அவர்களின் தாயும், அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். சிஸ்ஸிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு எங்களது நன்றிகள். அடுத்த சில வாரங்களில் தாயும், குழந்தைகளும் சொந்த ஊர் திரும்புவர்'' என்று கூறியிருந்தார்.

இந்த செய்தியை படிக்கவும் கேட்கவும் உற்சாகமாக இருந்தாலும், இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய போராட்டமே இருக்கிறது. 7 குழந்தைகளை எதிர்பார்த்திருந்த நிலையில் சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது 9 குழந்தைகள் பிறந்தன. சிஸ்ஸிக்கு, ஒரே நேரத்தில் 9 குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பு ஏற்பட்டது. அவருக்கு பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குழந்தைகள் ஒரு சில மாதங்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட வேண்டும் என்பதால், சிஸ்ஸி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 டயாபர்களை மாற்றியதாகவும், சுமாராக 6 லிட்டர் தாய்ப்பாலை கொடுத்ததாகவும், இதற்கே தான் சோர்வடைந்துவிடுவேன் என்றும், மெல்ல தனக்கு இதனை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைத்ததாகவும் தனது அனுபவத்தை  பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது பிரசவ கால அனுபவத்தை அவர் கூறுகையில், ஒவ்வொரு குழந்தையாக தனது வயிற்றிலிருந்து வெளியே வரும் போது, எனது சகோதரிதான் எனது கையை பிடித்திருந்தார். அப்போது எனது மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது ஒன்றுதான். எனக்கு யார் உதவப்போகிறார்கள்? எப்படி இந்த குழந்தைகளை வளர்க்கப்போகிறேன்? என்றுதான்.

இந்த அறுவை சிகிச்சையின்போது, சிஸ்ஸிக்கு பெரிய அளவில் ரத்த இழப்பு ஏற்பட்டதாகவும், அவர் மரணவாயிலைத் தொட்டுத் திரும்பியதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

பிரசவத்துக்கு மட்டும் சுமார் 10 கோடி செலவாகியிருக்கிறது. அதனை மாலி அரசே ஏற்றுக் கொண்டதால் அவர்களது குடும்பத்துக்கு பேருதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com