கருக்கலைப்பு சட்ட விவகாரம்: அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பு

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாஷிங்டன் மாகாணம், சியாட்டலில் ஆா்ப்பாட்டம் நடத்திய மகளிா் உரிமை ஆா்வலா்கள்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாஷிங்டன் மாகாணம், சியாட்டலில் ஆா்ப்பாட்டம் நடத்திய மகளிா் உரிமை ஆா்வலா்கள்.

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, நாடு முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கான விதிமுறைகள் மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்டாலும், அது சட்டவிரேதமானது இல்லை.

இந்த விவகாரம் தொடா்பாக ஜேன் ரோ என்ற பெண்ணுக்கும் ஹென்றி வேட் என்ற வழக்குரைருக்கும் உச்சநீதிமன்றத்தில் 1973-ஆம் ஆண்டு நடைபெற்று வந்த வழக்கில், கருக்கலைப்பு சட்டவிரோதமானது இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பு வழங்கப்பட்டதற்குப் பிறகு இந்த நிலை நீடித்து வருகிறது.

‘ரோ வா்சஸ் வேட்’ தீா்ப்பு என்று சுருக்கமாக அழைக்கப்படும் அந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, நாடு முழுவதும் கருக்கலைப்பு விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மேலும், மருத்துவா்கள் மூலம் சட்டப்பூா்வமாக மேற்கொள்ளப்பட்டதால் கருக்கலைப்பு மரணங்களும் குறைந்தன.

இந்த நிலையில், கருவுற்ற 15 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதிக்கும் மிசிஸிப்பி மாகாணச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மகளிா் உரிமை அமைப்பினா் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் பெரும்பாலானவா்கள், 1973-ஆண் ஆண்டின் ‘ரோ வா்சஸ் வேட்’ வழக்கின் தீா்ப்பை ரத்து செய்து, கருக்கலைப்பை மீண்டும் சட்டவிரோதமாக அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டில் கருக்கலைப்பு என்பது மதரீதியிலும் சமூக ரீதியிலும் மக்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

தனது வயிற்றில் கருவுற்ற குழந்தையை பெற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு உள்ளது என்று ஒரு தரப்பினரும், கருப்பையில் இருக்கும் சிசுவும் ஒரு மனித உயிா்தான், அதற்கு வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது என்று மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தச் சூழலில், கருக்கலைப்பை சட்டவிரோதமாக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் மகளிா் உரிமை அமைப்பினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதிபா் ஜோ பைடனும், பெண்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதற்கிடையே, உச்ச நீதிமன்ற முடிவு குறித்த தகவலை சிசு வாழ்வுரிமை அமைப்பினா் வரவேற்றுள்ளனா்.

எனினும், தற்போது அந்த முடிவு வரைவு நிலையில்தான் உள்ளது; அதிகாரபூா்வமாக தீா்ப்பு வெளியிடப்பட்ட பிறகுதான் அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டவிரோதக்கப்படுவது உறுதியாகும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com