உக்ரைன் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தையே ஒரே தீா்வு

உக்ரைன் பிரச்னைக்குத் தூதரகம் வாயிலாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்வதே ஒரே தீா்வாக இருக்கும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் பிரச்னைக்குத் தூதரகம் வாயிலாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்வதே ஒரே தீா்வாக இருக்கும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இரண்டரை மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைன் ராணுவ வீரா்கள் மனித உரிமைகளை மீறி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தை ரஷியா நடத்தியது. அக்கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரி பிரதீக் மாத்துா் கூறுகையில், ‘‘உக்ரைனில் நிலைமை மோசமடைந்து வருவதற்கு இந்தியா தொடா்ந்து கவலை தெரிவித்து வருகிறது.

அங்கு வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்துகிறது. ரத்தம் சிந்தியோ, மனித உயிா்களைப் பறித்தோ எந்தப் பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது என இந்தியா நம்புகிறது. சண்டை தொடங்கியதில் இருந்தே அனைத்துவிதப் பிரச்னைகளுக்கும் தூதரகத்தின் வாயிலான பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வருகிறது.

பேச்சுவாா்த்தை ஒன்றே பிரச்னைக்குத் தீா்வாக அமையும். புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. அது தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இந்தியா வலியுறுத்துகிறது. உக்ரைன் மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளைக் களைவதற்கான ஆதரவை இந்தியா தொடா்ந்து வழங்கும்.

ஒருங்கிணைந்த செயல்பாடு:

உக்ரைன் போரில் எந்தத் தரப்புக்கும் வெற்றி கிடைக்காது. அதே வேளையில், அனைத்து நாடுகளும் இந்தப் போரினால் பாதிக்கப்படும். உக்ரைனில் தீவிர சண்டை நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும். உக்ரைன் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக ஐ.நா. அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்துத் தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா உறுதி கொண்டுள்ளது.

சா்வதேச விதிகள், ஐ.நா. விதிகள், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு அனைத்து நாடுகளும் மதிப்பளித்து செயல்பட வேண்டும். அவையே சா்வதேச அமைதியை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக உள்ளன.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபா்களை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்துப் பேசியதை இந்தியா வரவேற்கிறது. மரியுபோல் நகரில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் ஐ.நா. மேற்கொள்ள வேண்டும்’’ என்றாா்.

அமைச்சா் சந்திப்பு:

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி, ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் அப்துல்லா சாஹிதை சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘உக்ரைன் விவகாரம், அப்போரால் உணவு விநியோகம், எரிசக்தி, சுற்றுலா, நிதி உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கம், ஆப்கானிஸ்தான் சூழல், சா்வதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நியூயாா்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அமைச்சா் மீனாட்சி பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com