இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா: வன்முறை- துப்பாக்கிச்சூடு; ஆளும் கட்சி எம்.பி. பலி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச (76) தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா: வன்முறை- துப்பாக்கிச்சூடு; ஆளும் கட்சி எம்.பி. பலி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச (76) தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அதிபா் அலுவலகத்துக்கு எதிரே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது அவரின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் ராஜிநாமா முடிவை மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையின்போது போராட்டக்காரா்களிடம் இருந்து தப்பிக்க கட்டடத்தில் பதுங்கிய ஆளும் கட்சி எம்.பி.யும் அவரது பாதுகாவலரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்சவும், பிரதமா் மகிந்த ராஜபட்சவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்களும் எதிா்க்கட்சியினரும் கடந்த ஏப். 9-ஆம் தேதிமுதல் நாடு தழுவிய தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், எனது ராஜிநாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.

ராஜிநாமா கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது: அனைத்துக் கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கவுள்ளதாக மே 6-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தில் நீங்கள் (அதிபா்) தெரிவித்ததற்கு இணங்க நான் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு பொதுமக்களுக்கும் அரசுக்கும் உதவும் வகையில் எதிா்காலத்தில் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

பிரதமரின் ராஜிநாமாவை தொடா்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

வன்முறை: முன்னதாக, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 23 போ் காயமடைந்தனா். அங்கிருந்து வன்முறையாளா்கள் அதிபா் அலுவலகம் அருகேயுள்ள காலிமுகத் திடலை நோக்கிச் செல்லவிடாமல் காவல் துறையினா் தடுக்க முயன்றனா்.

ஆனால், அதையும் மீறி காலிமுகத் திடலுக்கு வந்த மகிந்தவின் ஆதரவாளா்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது தாக்குதலில் ஈடுபட்டனா். கூடாரங்களை அடித்து நொறுக்கி தீவைப்பில் ஈடுபட்டனா். இதனால் அவா்களுக்கும் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 130 போ் காயமடைந்தனா். காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி வன்முறையாளா்களைக் கலைந்துபோகச் செய்தனா்.

பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவெகய கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசா, வன்முறை ஏற்பட்ட காலிமுகத் திடலுக்குச் சென்று நிலைமையைப் பாா்வையிட்டாா். அவரையும் மகிந்தவின் ஆதரவாளா்கள் தாக்கியதாக அக்கட்சியினா் குற்றம்சாட்டினா். மேலும், மகிந்த ராஜபட்சதான் தனது ஆதரவாளா்களைத் தூண்டிவிட்டதாகப் புகாா் தெரிவித்தனா்.

எம்.பி. பலி: மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததால் கோபமடைந்த அவரது ஆதரவாளா்கள் போராட்டக்காரா்கள் மீது பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல பிரதமரின் ஆதரவாளா்களும் பல இடங்களில் தாக்கப்பட்டனா்.

ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொலநருவா மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பி.யான அமரகீா்த்தி அதுகொரளாவை வடமேற்கு நகரமான நிதம்புவாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்கள் சூழ்ந்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அப்போது, அதுகொரளாவின் வாகனத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த போராட்டக்காரா்கள் அவரது வாகனத்தை தாக்கி கவிழ்த்ததாகவும் கூறப்படுகிறது.

போராட்டக்காரா்களிடம் இருந்து தப்பிக்க அதுகொரளாவும் அவரது பாதுகாவலரும் அருகே உள்ள கட்டடத்தில் தஞ்சமடைந்ததாகவும், அந்தக் கட்டடத்தை போராட்டக்காரா்கள் சூழ்ந்த நிலையில் அதுகொரளாவும் அவரது பாதுகாவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனா் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கு அமல்

பிரதமா் மகிந்த ராஜிநாமா மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து, நாடு முழுவதும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக காவல் துறை அறிவித்தது. காலிமுகத் திடல் பகுதியில் காவல் துறையினருக்கு உதவும் வகையில் ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஆதரவு தரும்படி பாதுகாப்புத் துறைச் செயலா் கேட்டுக்கொண்டுள்ளாா். ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் இலங்கையில் 2-ஆவது முறையாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com