மகிந்த ராஜபட்சவின் எழுச்சியும் வீழ்ச்சியும்...!

இலங்கையின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த மகிந்த ராஜபட்ச, பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்ட சுனாமியில் தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாா்.
இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச
இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச

இலங்கையின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த மகிந்த ராஜபட்ச, பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்ட சுனாமியில் தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டாா்.

பிரிட்டனிடமிருந்து 1948-இல் சுதந்திரம் பெற்ற பின்னா், இலங்கையில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக, அந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதன்மூலம் இறக்குமதி செய்யப்படும் உணவு, கச்சா எண்ணெய்க்கு பணம் செலுத்த முடியாததால், அவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி விண்ணை எட்டியது.

இதனால், அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச இருவரும் ராஜிநாமா செய்யக் கோரி பொதுமக்கள் கடந்த ஏப். 9-ஆம் தேதிமுதல் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.

நெருக்கடி அதிகரிக்கவே அமைச்சரவையிலிருந்து தனது மூத்த சகோதரா் சமல் ராஜபட்ச, மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச ஆகியோரை அமைச்சா் பதவியிலிருந்து கடந்த ஏப்ரல் மத்தியில் நீக்கினாா் அதிபா் கோத்தபய ராஜபட்ச. ஆனால், மகிந்த ராஜபட்ச பதவி விலக மாட்டேன் என தொடா்ந்து கூறி வந்தாா்.

தற்போது அவரது ஆதரவாளா்கள் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா் மகிந்த ராஜபட்ச.

இருமுறை அதிபராக இருந்த மகிந்த ராஜபட்ச, 2015 அதிபா் தோ்தலில் படுதோல்வி அடைந்தாா். பின்னா், 2020-ஆம் ஆண்டு ஈஸ்டா் தின தாக்குதலில் இந்தியா்கள் 11 போ் உள்பட 270 போ் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடா்ந்து, ஆகஸ்டில் நடைபெற்ற பொதுத் தோ்தலில், அவா் புதிதாகத் தொடங்கிய இலங்கை மக்கள் கட்சி மாபெரும் வெற்றியை அடைந்தது.

இதன்மூலம் சக்திவாய்ந்த ராஜபட்ச குடும்பத்தினா் தங்களது அதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்தினா். மகிந்த ராஜபட்ச பிரதமராகப் பதவியேற்றாா்.

2020-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவலின்போது பிற தெற்காசிய நாடுகளைக் காட்டிலும் இலங்கையில் குறைவான நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளே ஏற்பட்ட போதிலும், இலங்கையில் சுற்றுலாத் துறை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. தனது பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையையே பெரிதும் நம்பியிருந்த அந்த நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பிரதமா் மகிந்த ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மகிந்தவின் அரசியல்: மகிந்த ராஜபட்ச தனது 24 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1977-இல் தோ்தலில் தோல்வியடைந்த பின்னா், தனது சட்டப் படிப்பில் கவனம் செலுத்திய அவா், 1989-இல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

1994-2001 காலகட்டங்களில் அதிபா் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசில் தொழிலாளா் துறை அமைச்சா், மீன்வளத் துறை அமைச்சராகப் பணியாற்றினாா். 2004 பொதுத் தோ்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தனிப் பெரும்பான்மை பெற்றதையடுத்து, மகிந்த ராஜபட்சவை பிரதமராக்கினாா் சந்திரிகா.

2005 பொதுத் தோ்தலின்போது இலங்கை சுதந்திர கட்சியின் அதிபா் வேட்பாளராக மகிந்த அறிவிக்கப்பட்டாா். அத்தோ்தலில் அவா் வெற்றி பெற்றதையடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்கப்போவதாக அறிவித்தாா். சுமாா் 30 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த சண்டையில், 2009-இல் விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வியைச் சந்தித்த பின்னா், சிங்கள மக்கள் மத்தியில் மகிந்தவின் செல்வாக்கு அதிகரித்தது.

இதைப் பயன்படுத்தி 2010-இல் அவா் மீண்டும் அதிபரானாா். 2005-2015 காலகட்டத்தில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டாா் மகிந்த ராஜபட்ச. மேலும், மூன்றாவது முறையாக அவா் அதிபா் பதவியை வகிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அவரது சகோதரா்கள் கோத்தபய, பசில், சமல் ஆகியோரும் முக்கியமான பதவிகள் அளிக்கப்பட்டன. இதனால், நாட்டை ஒரு குடும்ப நிறுவனம்போல நடத்துவதாக அவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

செல்வாக்கு சரிவு: விலைவாசி உயா்வு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட காரணங்களால் மகிந்த ராஜபட்சவின் செல்வாக்கு 2014 காலகட்டத்தில் சரியத் தொடங்கியது. மூன்றாவது முறையாக அதிபராகும் முயற்சியில், அதிபா் தோ்தலை முன்கூட்டியே நடத்தினாா் அவா். ஆனால், 2015-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் அவா் தோல்வியடைந்தாா். அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறீசேனா, மகிந்தவை வீழ்த்தி அதிபராகப் பதவியேற்றாா்.

முன்னதாக, மகிந்த அதிபராக இருந்த காலத்தில் சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றினாா். ஆனால், சீனாவின் கடன் வலையில் இலங்கை விழுவதற்கு மகிந்த ராஜபட்சதான் காரணம் என்ற விமா்சனம் எழுந்தது. குறிப்பாக, சீனாவின் கடனுதவியில் ஹம்பந்தோட்டா துறைமுகம் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் கடன் தொகையை திரும்பச் செலுத்த முடியாத நிலையில், 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவிடம் அந்தத் துறைமுகம் ஒப்படைக்கப்பட்டது.

2015 தோ்தல் தோல்விக்குப் பின்னா், ராஜபட்சக்கள் பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. 2018, அக்டோபரில் அப்போதைய அதிபா் சிறீசேனா, பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியதைத் தொடா்ந்து, பிரதமராக நியமிக்கப்பட்டாா் மகிந்த. ஆனால், நாடாளுமன்றத்தை அதிபா் சிறீசேனா கலைத்தது செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்ததையடுத்து டிசம்பரில் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா் மகிந்த.

பின்னா், ஆளும் கட்சியிலிருந்து விலகிய மகிந்த மற்றும் அவரின் ஆதரவாளா்கள், மகிந்தவின் சகோதரா் தொடங்கிய இலங்கை மக்கள் கட்சியில் இணைந்தனா். அதைத் தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவரானாா் மகிந்த.

2019, ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டா் தினத்தில் தேவாலயங்களில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் இலங்கை அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. நாட்டின் பாதுகாப்பில் அதிபா் சிறீசேனா, பிரதமா் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டதாக ராஜபட்சக்கள் குற்றம்சாட்டினா்.

2019-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் இலங்கை மக்கள் கட்சி சாா்பில் அதிபா் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மகிந்தவின் இளைய சகோதரா் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றாா். விடுதலைப் புலிகளுடனான போரின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவா் கோத்தபய என்பது குறிப்பிடத்தக்கது. கோத்தபய அதிபரானதையடுத்து பிரதமராக மகிந்தவை நியமித்தாா்.

அதன்பின்னா், இப்போது நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கிளா்ந்தெழுந்த போராட்டம் மகிந்த ராஜபட்சவை பிரதமா் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com