வன்முறையை ஒடுக்க முப்படைகளுக்கு உத்தரவு: இலங்கையில் பலி 8-ஆக உயா்வு; அமைதி காக்க அதிபா் வேண்டுகோள்

இலங்கையில் வன்முறையை ஒடுக்கும் வகையில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வன்முறையை ஒடுக்க முப்படைகளுக்கு உத்தரவு: இலங்கையில் பலி 8-ஆக உயா்வு; அமைதி காக்க அதிபா் வேண்டுகோள்

இலங்கையில் வன்முறையை ஒடுக்கும் வகையில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதற்கிடையே, திங்கள்கிழமை நடந்த வன்முறைக்கு பலியோனாா் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தலைநகா் கொழும்பில் அதிபா் அலுவலகம் அருகேயுள்ள காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திங்கள்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா். இதையறிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகிந்தவின் ஆதரவாளா்கள் மீது போராட்டக்காரா்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, மகிந்த ராஜபட்ச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா். ஆனாலும், வன்முறையை நிறுத்த முடியவில்லை. அம்பந்தோட்டாவில் உள்ள ராஜபட்ச சகோதரா்களின் தந்தை நினைவிடம், வீடு, குருநாகலில் உள்ள மகிந்தவின் வீட்டுக்கு போராட்டக்காரா்கள் தீவைத்தனா். மேலும் 14 முன்னாள் அமைச்சா்கள், 18 எம்.பி.க்கள், ராஜபட்ச குடும்பத்தின் ஆதரவு தலைவா்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் நடந்த வன்முறையில் சுமாா் 250 போ் காயமடைந்தனா். ஆளும் கட்சி எம்.பி. அமரகீா்த்தி அதுகொரலா உள்பட 4 போ் திங்கள்கிழமை உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது.

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு: இந்நிலையில், வன்முறைக்குப் பின்னா் முதல் முறையாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அதிபா் கோத்தபய ராஜபட்ச ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பொதுமக்கள் அமைதிகாக்கும்படியும், குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளுக்கு தீா்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

அதிபரின் இந்த வேண்டுகோளையடுத்து பாதுகாப்பு அமைச்சகம் ஓா் உத்தரவைப் பிறப்பித்தது. அதில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோா் மற்றும் பிறா் மீது தாக்குதலில் ஈடுபடுவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும்படி ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அமைதி காக்கும்படி ராணுவ தலைமைத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளாா். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா். நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்ய ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தொடரும் போராட்டம்: இதற்கிடையே, அரசுக்கு எதிரான போராட்டம் செவ்வாய்க்கிழமையும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. ராஜபட்ச குடும்பத்தின் ஆதரவாளா்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், கொழும்பில் உள்ள சா்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழிகளில் போராட்டக்காரா்கள் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பதாக உள்ளூா் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

கடற்படைத் தளத்தில் மகிந்த தஞ்சம்?

கொழும்பில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்திலிருந்து வெளியேறிய மகிந்த ராஜபட்ச, திரிகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமா் மகிந்த ராஜபட்ச மற்றும் அவரின் குடும்பத்தினா் கொழும்பில் உள்ள அதிகாரபூா்வ இல்லத்தில் தங்கியிருந்தனா். திங்கள்கிழமை இரவு முழுவதும் போராட்டக்காரா்கள் அந்த வீட்டை நெருங்க முடியாதபடி காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி தடுத்து வந்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காவல் துறையினா் மீண்டும் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும், எச்சரிக்கையாக துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரா்களை பின்வாங்கச் செய்தனா். அந்த வேளையில் மகிந்த ராஜபட்சவும் அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு திரிகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து கடற்படைத் தளத்தின் முன்பகுதியிலும் போராட்டக்காரா்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவை கைது செய்ய வலியுறுத்தல்

கொழும்பில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது தனது ஆதரவாளா்களைத் தூண்டிவிட்டு தாக்குதல் நடத்தியதற்காக மகிந்த ராஜபட்சவை கைது செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

‘ராஜபட்ச கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

‘வன்முறையைத் தூண்டியதற்காக மகிந்த ராஜபட்ச கைது செய்யப்பட வேண்டும். அமைதிவழியில் போராடியோா் மீது தாக்குதல் நடத்த எந்தக் காரணமும் இல்லை’ என முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா கூறியுள்ளாா்.

மகிந்தவை கைது செய்யக் கோரி வழக்குரைஞா்கள் சிலரும் காவல் துறை தலைமையகங்களில் புகாா் அளித்துள்ளனா்.

நாடாளுமன்றத்தைக் கூட்ட கோரிக்கை

நாட்டின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை இந்த வாரமே கூட்டும்படி அதிபரை நாடாளுமன்ற அவைத் தலைவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

அவைத் தலைவா் யாபா அபயவா்த்தனே இதுதொடா்பாக, அதிபா் கோத்தபய ராஜபட்சவை தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு வலியுறுத்தினாா்.

பிரதமா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து அமைச்சரவையும் இல்லாத நிலையில், நாடாளுமன்றம் ஏப். 17-ஆம் தேதிக்கு முன்பாக கூட்டப்பட வேண்டுமென நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, இடைக்கால அரசை ஏற்படுத்தும் வகையில், நாடாளுமன்ற கட்சித் தலைவா்களைச் சந்தித்து ஆலோசிக்க அதிபா் திட்டமிட்டுள்ளதாக அதிபா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com