அதிபர் பதவி நீக்கமா? ராணுவ ஆட்சியா? இலங்கையில் அடுத்து என்ன? 

கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய மறுத்துவரும் நிலையில், எதிர்க்கட்சியினர் அடங்கிய  அனைத்து கட்சி அரசை அமைப்பதற்கு அவர் விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தவித்துவரும் இலங்கையில் கடந்த வாரமாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் சிக்கி எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இதனிடையே, அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தாலும்,  அதனை கோத்தபய ராஜபட்ச ஏற்பதாக இல்லை. 

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்திய அவர், "நாட்டை முன்னோக்கி எடுத்து செல்தவற்கு புதிய அரசை அமைத்து புதிய பிரதமரை நியமிக்க வாய்ப்பு அளிக்கவுள்ளேன். ஸ்திரத்தன்மை நிலைநாட்டிய பிறகு, அதிபரின் அதிகாரங்களை குறைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்வேன்" என்றார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பல நாள்களாக  அரசை எதிர்த்து மக்கள் அறவழியில் போராட்டம் நடத்திவருகின்றனர். இதற்கிடையே, அவர்கள் மீது அரசின் ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை மாலை வரை ஊரடங்கை நீட்டித்து கோத்தபய உத்தரவிட்டார். 

ராஜபட்ச குடும்பத்தினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆளும் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் வீடுகளில் தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக, ராஜபட்ச குடும்பத்தினர் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி வேறு இடத்தில் யாருக்கும் தெரியாத வகையில் மறைந்துள்ளனர். 

பிரச்னை மோசமடைந்த நிலையில், கோத்தபயவின் சகோதரர் மஹிந்த பிரதமர் பதவியிலிருந்து விலக அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தாண்டு வர வேண்டிய 8.6 பில்லியன் டாலர் கடன்  குறித்து சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் இல்லாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் நிதிநிலைமையை நிலையாக்கவும் இலங்கை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் சர்வதேச நிதியத்தின் கடன் அவசியம்.

இதுகுறித்து கொழும்புவில் உள்ள தேசிய அமைதி கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் ஜெஹான் பெரேரா கூறுகையில், "அடுத்து வரும் நாள்களில் என்ன நடைபெறும் என்பதை அதிபர் விளக்க வேண்டும். நிலைமை மோசமாவதற்கு முன்பு தன்னை ஆளுமை மிகுந்த ஒருவர் என நிரூபிப்பதற்கு அவருக்கு இது ஒரு வழி" என்றார்.

இலங்கையில் அடுத்து என்ன?

அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்

இலங்கை அரசியலமைப்பின்படி, அந்நாட்டு அதிபரை நீக்குவது என்பது செயல்முறையில் கடினமான ஒன்று. அதிக காலம்  ஆகும். முதலில், 
அதிபர் பதவிக்கு குறிப்பிட்ட நபர் ஏன் தகதியற்றவர் என்பதை  விளக்கும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. பின்னர், அதனை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். தீர்மானத்தை நீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இன்னும் ஆளும் கட்சிக்கே இருப்பதாக ஆளும் இலங்கை மக்கள் முன்னணியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இது, கடந்த வாரம் புதிய துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும்போது நிரூபணமானது. ஆனால், 12க்கும் மேற்பட்ட எம்பிக்கள், ராஜபட்ச குடும்பத்திற்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் எம்பிக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

எதிர்கட்சியினரின் உதவியோடு ஒருங்கிணைந்த அரசாங்கத்தை அமைக்கலாம்

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த விலகியுள்ள நிலையில், அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைக்கும் புதிய முயற்சியில் கோத்தபய இறங்கியிருக்கிறார். ஆனால், அதிபருக்கு அதிக அதிகாரங்கள் இருப்பதை காரணம் காட்டி
முக்கிய எதிர்க்கட்சிகள் அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.

தற்காலிக அரசை அமைக்க வேண்டும் என்றும் அது நாட்டை 18 மாதங்களுக்கு ஆட்சி செய்யும் நேரத்தில் அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வரலாம் என்றும்
இலங்கை மக்களிடையே செல்வாக்கு படைத்த பெளத்த மதகுரு,  இலங்கை பார் கவுன்சில் ஆகியோர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளின் ஆதரவு இல்லாத அரசு விரையில் கவிழ்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு அதிபர் தேர்தலை அறிவிக்கலாம் 

ஐந்தாண்டு பதவி காலம் கொண்டுள்ள நாடாளுமன்றத்தை இடைகாலத்தில் கலைப்பதற்கு அரசியலமைப்பின்படி அதிபருக்கு அதிகாரம் இல்லை. அதாவது, 2023 பிப்ரவரி வரை நாடாளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது. ஆனால், நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்றுவதன் மூலம் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். 

சமீபத்தில், இதுகுறித்து எதிர்க்கட்சியை சேர்ந்த  சில தலைவர்கள் ஆலோசித்தனர். ஆனால், தேர்தல் நடத்துவதற்கான செலவு அதற்கு எடுக்கப்படும் கால அளவு ஆகியவை இந்த யோசனைக்கு பின்னடைவாக கருதபடுகின்றன. தேர்தலில், எதிர்க்கட்சியினர் வெற்றிபெற்றாலும், முக்கிய அதிகாரங்கள் அதிபரிடமே தொடரும். நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை  குறிப்பிட்ட நபருக்கு இருப்பதாக அதிபர் நினைக்கும் பட்சத்தில் அவரை பிரதமராக நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. அதேபோல, அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும் பதவியிலிருந்து நீக்குவதுதற்கான அதிகாரமும் அதிபருக்கே உள்ளது. 

எனவேதான், தேர்தலை  நடத்துவதற்கு பதில் அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்தன. முந்தைய மிஹிந்த தலைமையிலான அமைச்சரவையும் இது தொடர்பான மசோதாவை கொண்டுவரும் முயற்சியில் இறங்கின. 

ஆட்சியை ராணுவம் கைப்பற்றலாம்

கடந்த காலங்களில், இலங்கையில் சர்வாதிகாரிகளும் ஆட்சி நடத்தியுள்ளனர். இதற்கு மத்தியில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில் அது ராஜபட்ச குடும்பத்தினருக்கு ஆதரவாகவே அமையும். கடந்த 17 ஆண்டுகளில், 13 ஆண்டுகளாக ராஜபட்ச குடும்பத்தினர்தான் ஆட்சி நடத்திவருகின்றனர். குறிப்பாக, 26 ஆண்டுகளாக நடைபெற்ற போரை மஹிந்த தலைமையிலான அரசு ராணுவத்தின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது. அதுமட்டுமின்றி,  முக்கிய பொறுப்புகளில் முன்னாள் மற்றும் இன்னாள் ராணுவ அதிகாரிகளையே  கோத்தபய நியமித்துள்ளார். 

விடுதலை  புலிகளுக்கு  எதிரான போரின்போது போர் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட இலங்கை ராணுவத்தின் தளபதி ஸவேந்திர சில்வா, பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கமல் குணரத்னா ஆகியோர் கோத்தபயவுக்கு நெருக்கமானவர்களாக கருதப்படுகின்றனர். 

இலங்கை நெருக்கடி குறித்து வெளிநாட்டு தூதர்களுடன் பேசிய சில்வா, "இலங்கை இராணுவம் அரசியலமைப்பை நிலைநாட்டும். அரசுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க தயாராக உள்ளது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com