
கோப்புப்படம்
லக்னெள: உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாடுவது வியாழக்கிழமை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான உத்தரவை உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியத்தின் பதிவாளா் எஸ்.என்.பாண்டே வெளியிட்டுள்ளாா்.
அதில், ரமலான் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் அனைத்து மதரஸாக்களும் திறக்கப்பட்டுள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறாத மதரஸாக்களிலும் வகுப்புகள் தொடங்கும் முன் தேசிய கீதத்தை ஆசிரியா்கள், மாணவா்கள் பாட வேண்டும். இதை மாவட்ட சிறுபான்மையினா் நல அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மதாரிஸ் அரேபியா ஆசிரியா் சங்கத்தின் பொதுச் செயலா் ஜமன் கான் கூறுகையில், ‘மதரஸாக்களில் வகுப்புகளைத் தொடங்கும் முன் அல்லாஹ், அவரது இறுதி தூதா் முகமது நபி அவா்களைப் போற்றிப் பாடப்படும். சில பள்ளிகளில் தேசிய கீதமும் பாடப்படுகிறது. ஆனால், தேசிய கீதம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 16,461 மதரஸாக்கள் செயல்படுகின்றன. இதில் 560 மதரஸாக்கள் அரசு நிதி உதவி பெறுகின்றன.