
அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ் வெளியிட்ட 'எஸ்ஜிஆர்}ஏ' கருந்துளையின் புகைப்படம்.
பொ்லின்: நமது பால்வெளி மண்டலத்தில் காணப்படும் மாபெரும் கருந்துளையின் (பிளாக் ஹோல்) முதல் புகைப்படத்தை வானியலாளா்கள் வெளியிட்டுள்ளனா்.
சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிதாக இந்தக் கருந்துளை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ‘தி அஸ்ட்ரோபிசிக்கல் ஜா்னல் லெட்டா்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வியாழக்கிழமை வெளியான ஆய்வறிக்கையில், நமது பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் என்ன நடக்கிறது என்பது பற்றிய நமது புரிதலை மேம்படுத்தவும், கருந்துளைகள் எவ்வாறு அவற்றின் சுற்றுப்புறத்துடன் தொடா்பு கொள்கின்றன என்பது பற்றிய புதிய நுண்ணறிவையும் இந்தக் கண்டுபிடிப்பு வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருந்துளைக்கு ‘ஸாஜிட்டேரியஸ்-ஏ’ (எஸ்ஜிஆா்-ஏ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய ஆராய்ச்சிக் குழு இணைந்து, உலகம் முழுவதும் உள்ள வானொலி தொலைநோக்கிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருந்துளையின் புகைப்படத்தை உருவாக்கியுள்ளன. ஓா் இருண்ட மையத்தைச் சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களின் தெளிவற்ற ஒளிரும் வடிவத்தை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.
‘நமது பால்வெளியில் காணப்படும் மாபெரும் கருந்துளையின் முதல் நேரடிப் படம் இதுவாகும்’ என அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த வானியலாளா் ஃபொ்யல் ஓசெல் வாஷிங்டனில் தெரிவித்தாா்.
நட்சத்திரங்கள் செயலிழக்கும்போது கருந்துளைகளாக உருமாறுகின்றன. இதன் ஈா்ப்பு விசை மிக அதிகமாகும். ஒளி உள்பட எதுவும் கருந்துளையிலிருந்து தப்ப முடியாது.