ஆட்டத்தை தொடங்கிய எலான் மஸ்க்...ட்விட்டரில் இரண்டு மூத்த நிர்வாகிகள் நீக்கம்

ஆராய்ச்சி, வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளை தலைமை தாங்கி நடத்தி வந்த பொது மேலாளர் கெய்வோன் பெய்க்பூர், தயாரிப்பு மேலாளர் புரூஸ் பால்க் ஆகியோர் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறுகின்றனர்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ட்விட்டரின் மூத்த நிர்வாகிகள் இரண்டு பேர் நிறுவனத்திலிருந்து வெளியேறவுள்ளதையும் ஆட்கள் சேர்ப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் செல்லவுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சி, வடிவமைப்பு, பொறியியல் ஆகிய துறைகளை தலைமை தாங்கி நடத்தி வந்த பொது மேலாளர் கெய்வோன் பெய்க்பூர், தயாரிப்பு மேலாளர் புரூஸ் பால்க் ஆகியோர் ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறவுள்ளதாக ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திள்ளார்.

ஆனால், ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பெய்க்பூர் குற்றம்சாட்டியுள்ளார். மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெய்க்பூர் இதுகுறித்து ட்விட்டரில், "ட்விட்டரிலிருந்து இந்த நேரத்தில் இப்படி வெளியேறுவேன் என நினைத்து பார்த்ததில்லை. இதுதான் உண்மை.

மாறுபட்ட திசையில் குழுவை கொண்டு செல்ல விரும்புவதாக தெரிவித்து விட்டு என்னை நிறுவனத்திலிருந்து வெளியேற சொல்லிவிட்டார் ட்விட்டரின் தலைமை செயல் அலுவலர் பாரக் அகர்வால்" என பதிவிட்டுள்ளார். 

வணிக பிரிவில் முக்கிய பதவிகளை தவிர்த்துவிட்டு மற்ற அனைத்திலும் ஆட் சேர்ப்பு நடவடிக்கையை இந்த வாரத்திலிருந்து நிறுத்திவைப்பதாகவும் ட்விட்டர் அறிவித்துள்ளது. 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டரை  எலான் மஸ்க்  வாங்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு பங்குதாரர்கள், ஒழுங்குமுறை நிறுவனங்களின் ஆதரவு தேவை.

ஏற்கனவே, தனியார் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், மின்சார கார்களை தயாரிக்கும் டெஸ்லா ஆகியவற்றின் உரிமையாளராக உள்ளார் எலான் மஸ்க். இந்தாண்டிலேயே, எலான் மஸ்க் கட்டுப்பாட்டின் கீழ் ட்விட்டர் நிறுவனம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது விதிக்கப்பட்டுள்ள ட்விட்டர் தடை திரும்ப பெற்று கொள்ளப்படும் என அவர் அறிவித்தார். டிரம்ப் மீது விதிக்கப்பட்டுள்ள தடையால் அமெரிக்காவின் பெரும்பான்மை பகுதி அந்நியப்படுத்தப்பட்டிருப்பதாக மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com