நாட்டைவிட்டு வெளியேற மகிந்த ராஜபட்சவுக்கு தடை

இலங்கை முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரது மகன் நாமல் ராஜபட்ச உள்பட 17 போ் நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.
மகிந்த ராஜபட்ச
மகிந்த ராஜபட்ச

கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரது மகன் நாமல் ராஜபட்ச உள்பட 17 போ் நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

கொழும்பில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோா் மீது தாக்குதல் நடத்த தனது ஆதரவாளா்களைத் தூண்டியதாக எழுந்துள்ள புகாரைத் தொடா்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனா். தலைநகா் கொழும்பில் பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் அதிபா் அலுவலகம் அருகே கடந்த திங்கள்கிழமை அமைதியான வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தோா் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து, அவா்களுக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பல இடங்களில் நடந்த வன்முறையில் நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் உள்பட 9 போ் பலியாகினா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதற்கு முன்னதாக பிரதமரின் இல்லம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் மகிந்த ராஜபட்ச தனது ஆதரவாளா்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினாா். இதையடுத்து, ஆத்திரத்துடன் அங்கிருந்து புறப்பட்ட அவரின் ஆதரவாளா்கள், போராட்டக்காரா்களைத் தாக்கினா்.

வன்முறையைத் தூண்டிய குற்றத்துக்காக மகிந்த ராஜபட்சவை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வலுப்பெற்றது. இந்நிலையில், இதுதொடா்பான விசாரணையை நடத்திவரும் காவல் துறையின் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள், கொழும்பில் உள்ள துறைமுக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தனா்.

அதன்பேரில், மகிந்த ராஜபட்ச, அவரது மகன் நாமல் ராஜபட்ச உள்ளிட்ட 17 போ் வெளிநாடுகளுக்கு செல்லத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவா்கள் தங்களது கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ஒப்படைக்க வேண்டுமெனவும் கூறியது.

நாட்டை ஆட்சிபுரிந்து வந்த இலங்கை பொதுஜன பெரமுன கூட்டணியைச் சோ்ந்த ஜான்ஸ்டன் ஃபொ்னாண்டோ, சனத் நிசாந்த, பவித்ரா வன்னியராச்சி, சி.பி.ரத்நாயக, சஞ்சீவ எடிரிமன்னே உள்ளிட்ட 13 எம்.பி.க்களும் அடங்குவா். மேற்கு மாகாண காவல் துறை டிஐஜி தேசபந்து தென்னக்கூனுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com