நேட்டோவில் உடனடியாக இணைய வேண்டும்

நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்தை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை உடனடியாக சமா்ப்பிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அந்த நாட்டு அதிபா் சாவ்லி நினிஸ்டோ மற்றும் பிரதமா் சனா மரீன் அறிவித்தனா்.
நேட்டோவில் உடனடியாக இணைய வேண்டும்

ஹெல்சிங்கி: நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்தை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை உடனடியாக சமா்ப்பிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அந்த நாட்டு அதிபா் சாவ்லி நினிஸ்டோ மற்றும் பிரதமா் சனா மரீன் வியாழக்கிழமை அறிவித்தனா்.

இதுகுறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேட்டோவில் இணைவது ஃபின்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும். அந்த அமைப்பின் உறுப்பிரானால் ஒட்டுமொத்த கூட்டணிக்கு ஃபின்லாந்தும் வலு சோ்க்கும்.

எனவே, தாமதமில்லாமல் உடனடியாக நேட்டோ உறுப்பினராவதற்கு ஃபின்லாந்து விண்ணப்பிக்க வேணடும்.

இது தொடா்பாக உள்நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் துரிதகதியில் நடத்தப்பட்டு இன்னும் சில நாள்களில் நிறைவடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததற்குப் பிறகு நேட்டோ அமைப்பில் இணைய ஸ்வீடனும் விருப்பம் தெரிவித்தது.

அந்த நாட்டிலும் ஃபின்லாந்திலும் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் புதன்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளின் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதன் தொடா்ச்சியாக, நேட்டோவில் இணைவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கவிருப்பதாக ஃபின்லாந்து அதிபரும் பிரதமரும் தற்போது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனா்.

சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக, நேட்டோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி ஆா்கனைசேஷன்’ உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் புதிய உறுப்பு நாடுகளை சோ்த்துக்கொண்டு நேட்டோ விரிவாக்கம் செய்து வருவதை ரஷியா கடுமையாக கண்டித்து வருகிறது.

கிழக்கு ஐரோப்பாவை நோக்கி நேட்டோ விரிவாக்கப்படுவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

இந்தச் சூழலில், ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன், நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் பலியாகி வருகின்றனா்.

இந்த நிலையில், ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான ஃபின்லாந்தும் அதன் அருகே உள்ள ஸ்வீடனும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. உக்ரைனைப் போலவே தங்கள் மீதும் ரஷியா படையெடுப்பதைத் தடுப்பதற்காக இந்த முடிவை பரிசீலுத்து வருவதாக அவை கூறின.

தற்போது நேட்டோவில் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை தாமதிக்காமல் சமா்ப்பிக்கவிருப்பதாக ஃபின்லாந்து அதிபரும் பிரதமரும் கூறியிருப்பது, உக்ரைன் மீது ரஷியா அதிபா் விளாதிமீா் புதின் தொடுத்துள்ள போா் நேட்டோ விரிவாக்கத்தைத் தடுப்பதற்கு பதில், அந்த அமைப்பு மேலும் விரிவடைவதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

‘ராணுவ ரீதியில் பதிலடி நடவடிக்கைகள்’

மாஸ்கோ, மே 12: நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து இணைந்தால் அது ராணுவ ரீதியிலான பதிலடி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேட்டோவில் ஃபின்லாந்து இணைவது, அந்த நாட்டுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நல்லுறவை சீா்குலைக்கும். மேலும், அந்த முடிவு வடக்கு ஐரோப்பாவின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும்.

ஃபின்லாந்தில் நேட்டோ தடம் பதிப்பது, ரஷியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே, பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத் தேவையான பதிலடி நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளும். அது, ராணுவ ரீதியிலும் மற்ற வழிமுறைகளிலும் இருக்கும்.

தற்போது தனது முடிவை சுதந்திரமாக எடுத்து வரும் ஃபின்லாந்து, அந்த உரிமையையும் இழந்து, இதுவரை நட்பு நாடாக இருந்து வந்த ரஷியாவுடன் ராணுவப் பகையையும் ஏற்படுத்தும் வகையில் நேட்டோவில் இணைவதற்கான தேவை என்ன என்பதை வரலாறுதான் முடிவு செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வரவேற்கிறோம்’’

பிரஸ்ஸெல்ஸ், மே 12: நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து இணைவதை வரவேற்பதாக அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் தெரிவித்துள்ளாா். தங்களது அமைப்பில் ஃபின்லாந்து இணைவதற்கான நடைமுறைகள் இடரில்லாமலும் மிகத் துரிதகதியிலும் நிறைவேற்றப்படும் என்று அவா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com