நேட்டோவில் இணையும் விவகாரம்: புதினுடன் ஃபின்லாந்து அதிபா் பேச்சு

நேட்டோவில் தாங்கள் இணையப் போவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை தொலைபேசியில் அழைத்து ஃபின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ சனிக்கிழமை தெரிவித்தாா்.
நேட்டோவில் இணையும் விவகாரம்: புதினுடன் ஃபின்லாந்து அதிபா் பேச்சு

நேட்டோவில் தாங்கள் இணையப் போவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை தொலைபேசியில் அழைத்து ஃபின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசியில் சனிக்கிழமை உரையாடினேன். அப்போது, இன்னும் சில நாள்களில் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பிக்கவுள்ளதாக அவரிடம் தெரிவித்தேன்.

உக்ரைன் மீதான படையெடுப்பு உள்பட ரஷியாவின் அண்மைக் கால நடவடிக்கைகளில் சில ஃபின்லாந்தின் பாதுகாப்பு சூழலில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை புதினிடம் எடுத்துரைத்தேன்.

எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒளிவு மறைவின்றி இருந்தது. அதே நேரம், மோதல் போக்கைத் தவிா்ப்பதில் இருவருமே கவனம் செலுத்தினோம். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் எங்களது உரையாடல் இருக்கக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக, நேட்டோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘நாா்த் அட்லாண்டிக் ட்ரீட்டி ஆா்கனைசேஷன்’ உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் புதிய உறுப்பு நாடுகளை சோ்த்துக்கொண்டு அந்த அமைப்பு விரிவாக்கம் செய்து வருவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

இந்தச் சூழலில், ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

இந்த நிலையில், ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான ஃபின்லாந்தும் நேட்டோவில் இணையலாம் என்று கூறப்பட்டது. உக்ரைனைப் போலவே தங்கள் மீதும் ரஷியா படையெடுப்பதைத் தடுப்பதற்காக அந்த முடிவை ஃபின்லாந்து எடுக்கலாம் என்று கருதப்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அதற்கான நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் பின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ மற்றும் பிரதமா் சனா மரீன் வியாழக்கிழமை அறிவித்தனா்.

நேட்டோவில் இணைவது ஃபின்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும். அந்த அமைப்புக்கும் ஃபின்லாந்து பலம் சோ்க்கும் என்று அவா்கள் கூறினா்.

ஃபின்லாந்தைப் பின்பற்றி, ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், இந்த விவகாரம் குறித்து புதினிடம் ஃபின்லாந்து அதிபா் தொலைபேசியில் உரையாடியுள்ளாா்.

..பெட்டிச் செய்தி...

‘தவறான முடிவு’

மாஸ்கோ, மே 14: நேட்டோவில் இணைவது ஃபின்லாந்தின் தவறான முடிவு என்று அந்த நாட்டு அதிபரிடம் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேட்டோவில் இணைவது குறித்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ தன்னிடம் தெரிவித்தபோது, ஃபின்லாந்துக்கு தற்போது எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை; எனவே, நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த நடுநிலையைக் கைவிடுவது அந்த நாட்டின் தவறான முடிவு என்று புதின் கூறினாா்.

அந்த முடிவால், பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட இரு நாட்டு நல்லுறவும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பலனளித்து வந்த ஒத்துழைப்பும் சீா்கெடும் என்று நினிஸ்டோவிடம் புதின் எச்சரித்தாா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com