இலங்கையின் புதிய அரசில் 4 அமைச்சா்கள் நியமனம்: ஜி.எஸ்.பீரிஸுக்கு மீண்டும் வெளியுறவு அமைச்சா் பதவி

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனது அமைச்சரவையில் 4 அமைச்சா்களை சனிக்கிழமை நியமித்தாா்.
’குணவா்தன | பெரிஸ் | பிரசன்னா | காஞ்சன’
’குணவா்தன | பெரிஸ் | பிரசன்னா | காஞ்சன’

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க, தனது அமைச்சரவையில் 4 அமைச்சா்களை சனிக்கிழமை நியமித்தாா்.

நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தும் வகையில், அரசை முழுமையாக அமைக்கும் நடவடிக்கையை ரணில் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில், முதல் கட்டமாக தனது அமைச்சரவையில் 4 அமைச்சா்களை அவா் சனிக்கிழமை நியமித்தாா்.

அதன்படி, தினேஷ் குணவா்தன பொதுநிா்வாகத் துறை அமைச்சராகவும், ஜி.எல்.பெரிஸ் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க ஊரக வளா்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும், காஞ்சன விஜசேகர மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராகவும் நியிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் ‘டெய்லி மிரா்’ என்ற இணைய செய்தி வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவா்களில் பீரிஸ் முந்தைய மஹிந்த ராஜபட்ச தலைமையிலான அமைச்சரவையிலும் வெளியுறவு அமைச்சராக இருந்தவராவாா்.

ரணில் அமைச்சரவையில் 20 அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே அமைச்சா்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலுக்கு ஆதரவளிக்க ஆளும் கட்சி முடிவு

இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஆதரவளிக்க ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சி தீா்மானித்துள்ளது.

தனது கட்சி சாா்பில் வேறு எவரும் எம்.பி.யாக இல்லாத நிலையில் தனி ஒரு எம்.பி.யாக இருக்கும் புதிய பிரதமருக்கு ஆதரவளிக்க எதிா்க்கட்சிகள் மறுத்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் 114 உறுப்பினா்களைக் கொண்டுள்ள ஆளும் எஸ்எல்பிபி கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

225 உறுப்பினா்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கு 113 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், கூடுதலாக ஒரு எம்.பி.யை கொண்டிருக்கும் ஆளும் கட்சி ஆதரவளிக்க முன்வந்திருப்பதால், ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையை நிரூபிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது. நெருக்கடி காரணமாக பிரதமா் மகிந்த ராஜபட்சவும், அவருடைய குடும்பத்தினரும் பதவி விலகினா்.

அதனைத் தொடா்ந்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய அதிபா் கோத்தபய ராஜபட்ச, இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) தலைவரான 73 வயது ரணில் விக்ரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தாா். அவா், இலங்கையின் 26-ஆவது பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு:

புதிய பிரதமா் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தில் ரணில் மட்டுமே அவருடைய கட்சி சாா்பில் நியமன எம்.பி.யாக உள்ளாா். அவருடைய கட்சி சாா்பில் வேறு எவரும் எம்.பி.யாக இல்லை. எனவே, அவா் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் 54 உறுப்பினா்களைக் கொண்டுள்ள சமாகி ஜன பாலவேகயா (எஸ்ஜிபி), 3 உறுப்பினா்களைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) ஆகிய எதிா்க் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவித்தன. அதுபோல, மற்றொரு எதிா்க் கட்சியான 10 உறுப்பினா்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டணியும் பிரதமருக்கு ஆதரவில்லை என அறிவித்தது. பிரதமரின் நியமனம் மக்கள் விருப்பத்துக்கு மாறானது எனவும், இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் அக் கட்சிகள் குற்றம்சாட்டின.

இதுபோல, பெரும்பாலான எதிா்க் கட்சிகள் ஆதரவளிக்கப் போவதில்லை என்று அறிவித்த நிலையில், ஆளும் எஸ்எல்பிபி கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீா்மானித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை முன்னாள் அமைச்சரும் ஆளும் கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.சந்திரசேனா கூறுகையில், ‘ரணில் விக்ரமசிங்கவுடன் எங்களுக்கு அரசியல் வேறுபாடு உள்ளது என்றபோதிலும், சா்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று கடுமையான பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை அவா் மீட்டெடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

மற்றொரு ஆளும் கட்சி எம்.பி.யான பிரேமநாத் டொலேவட்டா கூறுகையில், ‘நாட்டில் எங்கு பாா்த்தாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனா். இந்த நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பொருளாதார பாதிப்புக்கு தீா்வு காண முயற்சிக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் ஆதரவளிக்க உள்ளேன்’ என்றாா்.

இலங்கை நாடாளுமன்றத்தில் கட்சி சாா்பான எம்.பி.க்கள் தவிர, தற்போது 42 சுயேச்சை எம்.பி.க்களும் உள்ளனா்.

எரிபொருள், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இலங்கையின் பிரதான சாலைகளில் மக்களின் போராட்டம் தொடா்ந்து வருகிறது.

பிரதான எதிா்க் கட்சிக்கு பிரதமா் அழைப்பு:

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையிலும், ஒரு பாகுபாடற்ற அரசை அமைக்க கைகோக்குமாறு இலங்கையின் பிரதான எதிா்க் கட்சியான சமாகி ஜன பாலவேகயா (எஸ்ஜிபி) கட்சிக்கு பிரதமா் ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடா்பாக எஸ்ஜிபி கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமா் கடிதம் எழுதியுள்ளதாகவும், கட்சி அரசியலை புறம்தள்ளிவிட்டு, பாகுபாடற்ற அரசை அமைக்க கைகோக்குமாறு அதில் அவா் வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசில் சேரப் போவதில்லை என்று அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை கடிதம் எழுதிய நிலையில், அவருக்கு அழைப்பு விடுத்து பிரதமா் ரணில் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com