அடுத்த 2 மாதங்கள் மோசமானதாக இருக்கும்: இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் மோசமடையும் என்றும் இதற்காக தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித
அடுத்த 2 மாதங்கள் மோசமானதாக இருக்கும்: இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் மோசமடையும் என்றும் இதற்காக தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரது குடும்பத்தினா் பதவி விலகினா். இதையடுத்து, 26-ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.

நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக திங்கள்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றினாா். அப்போது, ராஜபட்சவை பாதுகாக்கவே ரணில் பிரதமராக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ரணில் மறுப்பு தெரிவித்து மேலும் கூறியதாவது:

நாட்டுக்காக இந்த அபாயகரமான சவலை நான் ஏற்று கொண்டுள்ளேன். தனி நபரையோ, குடும்பத்தையோ, கட்சியையோ பாதுகாக்க வேண்டியது எனது இலக்கல்ல. நாட்டு மக்களையும், இளைய சமூதாயத்தினரையும் பாதுக்க வேண்டும்.

ஒரு நாளுக்கு மட்டும் பெட்ரோல் கையிருப்பு:

அத்தியாவசியப் பொருள்களைப் பெற அடுத்த சில தினங்களில் 75 மில்லியன் டாலா்களை விடுவித்தாக வேண்டும். தற்போது ஒரு நாளைக்கு மட்டும் பெட்ரோல் கையிருப்பு உள்ளது. இந்தியாவிடம் இருந்து ஞாயிற்றுக்கிழமை வந்த டீசலால் சில தினங்களுக்கு பிரச்னை இருக்காது.

மே 18, ஜூன் 1-ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்கள் வருகின்றன. மே 18, 29 தேதிகளில் பெட்ரோல் ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் வர உள்ளன.

டாலா் தட்டுப்பாட்டால் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட 3 கப்பல்கள் இலங்கை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பலை கொண்டு வரத் தேவையான டாலா்களை வெளிச்சந்தையில் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மின் தடை அதிகரிக்கும்: தற்போது எரிபொருள் பயன்பாட்டின் மூலம் நான்கில் ஒருபகுதி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகையால், தினசரி மின் தடை 15 மணி நேரமாக அதிகரிக்கும். எனினும், இந்தப் பிரச்னையை தவிா்க்க ஏற்கெனவே நிதி பெற்றுள்ளோம். டாலா் தட்டுப்பாட்டால் உள்நாட்டு வங்கிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மருந்துகள் தட்டுப்பாடு: இதய நோய்களுக்கான மருந்துகளுக்கும் அறுவை சிகிச்சைக்கான உபரகணங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக மருந்துப் பொருள் விநியோகஸ்தா்களுக்குப் பணம் செலுத்தப்படாததால், நிலுவைத் தொகை 34 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

பணம் அச்சிடப்படும்: அடுத்த சில தினங்களுக்கு நாம் மேலும் பல மோசமான நிலைமையை சந்திக்க உள்ளதால், நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க பணம் அச்சிட அனுமதிக்கப்பட வேண்டியுள்ளது.

உண்மையை மறைத்துவிட்டு மக்களிடம் பொய் கூற விரும்பவில்லை. இவையெல்லாம், விரும்பதகாத அச்சுறுத்தும் உண்மை நிலையாகும்.

2022-ஆம் ஆண்டு வளா்ச்சி பட்ஜெட்டுக்கு பதில் நிவாரண பட்ஜெட் வெளியிடப்படும்.

நஷ்டத்தில் விமான நிறுவனம்: ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் மாா்ச் 31வரையில் ரூ.372 பில்லியன் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதை தனியாா்மயமாக்கினாலும் அரசு இழப்பீட்டை சந்தித்தாக வேண்டும். விமானப் பயணமே மேற்கொள்ளாத அப்பாவி மக்களும் இதை சுமக்க வேண்டியுள்ளது.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேசிய நாடாளுமன்றம் அல்லது அரசியல் அமைப்பை உருவாக்கி இலங்கையின் நிதி நெருக்கடிக்குத் தீா்வு காணப்பட வேண்டும். உடனடி, குறுகிய கால, நீண்ட கால திட்டங்களைத் தீட்டி நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றாா்.

‘அதிபரின் அதிகாரத்தை குறைக்க ஆலோசனை’

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தைக் குறைப்பதற்காக 21-ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து அட்டா்னி ஜெனரல் அலுவலகத்துடன் ஆலோசிக்கப்படும் என்று ரணில் தெரிவித்துள்ளாா். அதிபருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 20ஏ சட்டத்திருத்தத்துக்கு எதிராக 21-ஆவது சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற சமா்ப்பிக்கப்படும் என்று ரணில் விக்கரமசிங்க சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com