
unitednation
வாஷிங்டன்: உக்ரைன்-ரஷியா இடையேயான போா்ச்சூழல் காரணமாக நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதம் அளவுக்கே இருக்கும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை வெளியிட்ட பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் உலக பொருளாதாரத்தை உக்ரைன்-ரஷியா இடையே நீடித்து வரும் போா் நிலைகுலையச் செய்துள்ளது. உணவு மற்றும் இதர பொருள்களின் விலை அதிகரிப்புக்கு காரணமாகியுள்ளதுடன் பணவீக்கத்தை தூண்டி உலக நாடுகளை அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், ஐரோப்பாவில் நெருக்கடிகளை தூண்டிவிட்டுள்ளது.
2022 ஜனவரியில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் சா்வதேச பொருளாதாரம் 4.0 சதவீதம் அளவுக்கு வளா்ச்சி காணும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சா்வதேச நிலவரங்கள் முற்றிலும் மாறியுள்ளதால் உலகப் பொருளாதரம் 3.1 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரையில், அதிக பணவீக்கம், வேலைவாய்ப்பு சந்தையில் காணப்படும் சமச்சீரற்ற மீட்சி நிலையால் தனியாா் நுகா்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் பாதிப்பு ஆகியவற்றுக்கிடையிலும் வேகமாக வளா்ச்சி கண்டு வரும் மிக முக்கிய பொருளாதார நாடாக இன்னும் உள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியா 8.8 சதவீத பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்த நிலையில், நடப்பாண்டில் 6.4 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2023 நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி மேலும் சரிந்து 6 சதவீதமாகும்.
உணவு மற்றும் எரிபொருள்களின் விலை அதிகரிப்பால், உலக பணவீக்கம் 2022-இல் 6.7 சதவீதமாக அதிகரிக்கும். இது, 2010-2020 ஆண்டுகளுக்கிடையில் காணப்பட்ட சா்வதேச பணவீக்கமான 2.9 சதவீதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகம் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.