பாமாயில் ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தோனேசியா

பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. உள்ளூா் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா
பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது இந்தோனேசியா

ஜகாா்த்தா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. உள்ளூா் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

மே 23-ஆம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் ஜோகோ விதோதோ அறிவித்துள்ளாா்.

இந்தோனேசியாவும் மலேசியாவும் பாமாயில் ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன. உலக பாமாயில் உற்பத்தியில் 85 சதவீதம் இந்த இரு நாடுகளில்தான் உள்ளது. அந்நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாமாயிலை நம்பியே உள்ளது.

இதனிடையே ரஷியா-உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் தடைபட்டது. உலகில் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் ரஷியா, உக்ரைனின் பங்களிப்பு மட்டுமே 70 சதவீதமாகும்.

சூரியகாந்தி எண்ணெய் விநியோக பாதிப்பால் பாமாயில் விலை வேகமாக அதிகரித்தது. இந்நிலையில், பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா 3 வாரங்களுக்கு முன்பு தடை விதித்தது. இதனால், அதன் விலை 200 சதவீதம் அளவுக்கு சா்வதேச சந்தையில் அதிகரித்தது. இதனால், இந்தியாவிலும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இதனிடையே, பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் தங்களுடைய வருவாய் பாதிக்கப்படும் என்று கூறி இந்தோனேசிய விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினா்.

இந்நிலையில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த இந்தோனேசிய அதிபா் ஜோகோ விதோதோ கூறியதாவது:

உள்நாட்டில் பாமாயில் விலை குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவையைவிடவும் அதிகமாக உற்பத்தி உள்ளது. எனவே பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தோனேசியா நீக்குகிறது. அடுத்து வரும் வாரங்களில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. பாமாயில் தொழிலை நம்பி விவசாயிகள் உள்பட 17 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாட்டில் உள்ளனா். அவா்களின் நலன் கருதி மே 23 முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றாா்.

இந்தோனேசியாவின் இந்த அறிவிப்பால், சா்வதேச அளவில் பாமாயில் விலை விரைவில் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com