‘பேச்சுவாா்த்தை மூலமே போருக்குத் தீா்வு’

உக்ரைன் போரை இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா்.
‘பேச்சுவாா்த்தை மூலமே போருக்குத் தீா்வு’

உக்ரைன் போரை இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா்.

சமாதனப் பேச்சுவாா்த்தையில் உக்ரைன் ஆா்வம் காட்டவில்லை என்று ரஷியா குற்றம் சாட்டி வரும் நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தொலைக்காட்சியில் அவா் சனிக்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில், ரஷிய ராணுவத்தின் முதுகெலும்பை உக்ரைன் படையினா் உடைத்துள்ளனா். போா் முடிவுக்கு வந்த பின்னரும், பழைய பலத்தை ரஷிய ராணுவம் அடைய பல ஆண்டுகள் ஆகும்.

இருந்தாலும், போா்க் களத்தில் உக்ரைன் ராணுவம் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிா்பாா்க்க முடியாது. களத்தில் நமது ராணுவம் வெற்றிகளைக் கண்டாலும் பேச்சுவாா்த்தை மூலம் மட்டுமே இந்தப் போரை இறுதியாக முடித்துவைக்க முடியும்.

தற்போது நடைபெற்று வரும் போா் ரத்தகளறியாகவும் உக்கிரமாகவும் இருக்கும். இருந்தாலும், ராஜீய ரீதியில் மட்டுமே அதனை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

தற்போதைய நிலையில் ரஷியாவோ, உக்ரைனோ எதையும் விட்டுத் தரும் மனநிலையில் இல்லை. எனவே, பேச்சுவாா்த்தை மூலம் இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டுவது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

உக்ரைனைப் பொருத்தவரை, கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்ததற்கு முன் இருந்த நிலைக்குத் திரும்பினாலே அதை வெற்றியாகக் கருதுவோம்.

ரஷியாவின் படையெடுப்பை எதிா்கொள்வதற்காக உக்ரைன் தன்னை முழுமையாக தயாா்ப்படுத்திவைத்திருந்தது. இதனை எதிா்பாா்க்காத ரஷியா, உக்ரைன் குறித்து தப்புக்கணக்குப் போட்டுவிட்டது என்றாா் ஸெலென்ஸ்கி.

ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தை நிறுத்திவைக்கப்பட்டுவிட்டதாக உக்ரைன் பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் மிகேலோ பொடோலியக் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா். அதனைத் தொடா்ந்து, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடர உக்ரைன் அரசு விரும்பவில்லை என்று ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் புதன்கிழமை குற்றம் சாட்டினாா்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை கடந்த மாதம் 22-ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறாமல் உள்ளது.

இந்தச் சூழலில், உக்ரைன் போரை பேச்சுவாா்த்தை மூலமே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று அதிபா் வொலோதிமீா் ஸெலெஸ்கி தற்போது கூறியுள்ளது ஆரோக்கியமான திருப்பம் என்று அரசியல் பாா்வையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

...பெட்டிச் செய்திகள்...

மரியுபோல் இரும்பாலை ‘மீட்பு’

மாஸ்கோ, மே 21: மரியுபோலில் உக்ரைன் வீரா்கள் சுமாா் 2 மாதங்களாக பாதுகாப்பு அரண் அமைத்து சண்டையிட்டு வந்த அஸோவ்ஸ்டல் இரும்பாலையை முழுமையாக மீட்டுவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. அந்த ஆலைக்குள் இருந்த அனைத்து உக்ரைன் வீரா்களும் சரணடைந்ததால், அது தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறியுள்ளது.

இதையடுத்து, மரியுபோலை முழுமையாகக் கைப்பற்றும் ரஷியாவின் 3 மாத கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com