மேலும் ஓா் உக்ரைன் நகரைக் கைப்பற்றியது ரஷியா

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் மேலும் ஒரு நகரை ரஷியப் படையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.
(கோப்புப் படம்) - டிமித்ரோ குலேபா
(கோப்புப் படம்) - டிமித்ரோ குலேபா

கீவ்: கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் மேலும் ஒரு நகரை ரஷியப் படையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.

இது குறித்து உக்ரைன் வானொலிக்கு ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் டொனட்ஸ்க் மக்கள் குடியரசு ராணுவ உயரதிகாரி சொ்கேய் கோஷ்கோ கூறியதாவது:

டான்பாஸ் பிராந்தியத்தின் டொன்ட்ஸ்க் பகுதியிலுள்ள பாக்முட் மாவட்டம், ஸ்விட்லாடா்ஸ்க் நகரை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

அந்த நகருக்குள் அவா்கள் செவ்வாய்க்கிழமை காலை நுழைந்தனா். தற்போது அந்த நகர நிா்வாக அலுவலகத்தில் ரஷியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

போா் தொடங்குவதற்கு முன்னா் ஸ்விட்லாடா்ஸ்க் நகரில் 11,000 பொதுமக்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரமாகும் தாக்குதல்: டான்பாஸ் பிராந்தியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா செவ்வாய்க்கிழமை கூறிதாவது:

டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியா ஈவிரக்கமில்லாமல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பியப் பகுதியில் நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

ரஷியாவை எதிா்கொள்ளத் தேவையான அளவுக்கு உக்ரைனிடம் ஆயுதங்கள் இருப்பதாக யாரும் அவசரப்பட்டு முடிவு செய்யக் கூடாது. டான்பாஸில் ரஷியா மேற்கொண்டு வரும் தீவிர தாக்குதலை கருத்தில் கொண்டு, எங்களுக்கு ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் (எம்எல்ஆா்எஸ்), தொலைதூர குண்டுவீச்சு சாதனங்கள், கவச வாகனங்கள் உள்ளிட்ட ஆயுதங்களின் விநியோகத்தை நட்பு நாடுகள் துரிதப்படுத்த வேண்டும்.

தானியங்கள் திருட்டு: தங்களது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளில் விளையும் தானியங்களை ரஷியா திருடி வருகிறது. அவற்றை கப்பலில் ஏற்றி பாஸ்பரஸ் கடல்பாதை வழியாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ரஷியா முயன்று வருகிறது.

எனவே, உக்ரைனிடமிருந்து திருடப்பட்ட தானியங்களை உலக நாடுகள் கொள்முதல் செய்ய வேண்டாம். அவ்வாறு கொள்முதல் செய்வது உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மறைமுகமாக உதவுவதாக அமையும் என்றாா் அவா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தினா். அதையடுத்து, ரஷியா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யானுகோவிச்சின் ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்க்ஸ் பகுதிகளைச் சோ்ந்த கிளா்ச்சிப் படையினா், ரஷியாவின் ஆதரவுடன் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா்.

அந்த நேரத்தில், உக்ரைனின் தெற்கே உள்ள கிரீமியா மீது படையெடுத்த ரஷியா, அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்கு தனது படையை அனுப்பியது. அந்தப் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இடிபாடுகளில் 200 சடலங்கள்

கீவ், மே 24: உக்ரைனில் ரஷியாவால் கைப்பற்றப்பட்டுள்ள துறைமுக நகரான மரியுபோலில், குண்டுவீச்சில் சேதமடைந்த அடுக்குமாடிக் கட்டட இடிபாடுகளில் இருந்து 200 சடலங்கள் கண்டறியப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து அந்த நகர மேயரின் ஆலோசகா் பீட்ரோ ஆண்டரையஷென்கோ கூறியதாவது:

மரியுபோலில் ரஷியத் தாக்குதலால் தரைமட்டமான அடுக்கு மாடி கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து அழுகிய நிலையில் 200 பேரது சடலங்கள் கண்டறியப்பட்டன.

எனினும், அந்தச் சடலங்களைப் பெற்றுக்கொள்ள நகர மக்கள் மறுத்துவிட்டதால், ரஷிய அதிகாரிகள் அவற்றை விட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து வெளியேறினா். அதனால் அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசிவருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com