கிழக்கு நகரங்களை நெருங்கும் ரஷியா, ஆயுத உதவி கேட்கும் உக்ரைன்

உக்ரைனின் லிமான் பகுதியை கைப்பற்றிய பிறகு ரஷியப் படைகள் சிவியரோடொனட்ஸ்க் நகரினை நோக்கி முன்னேறி வருவதால் உக்ரைன் அதிபர் நீண்ட தொலைவு தாக்கவல்ல ஆயதங்களை மேற்கத்திய நாடுகளிடம் கேட்டுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உக்ரைனின் லிமான் பகுதியைக் கைப்பற்றிய பிறகு ரஷியப் படைகள் சிவியரோடொனட்ஸ்க் நகரினை நோக்கி முன்னேறி வருவதால் உக்ரைன் அதிபர் நீண்ட தொலைவு தாக்கவல்ல ஆயதங்களை மேற்கத்திய நாடுகளிடம் கேட்டுள்ளார்.

ரஷியப் படைகள் மெதுவாக உக்ரைனுக்குள் நுழைந்து டான்பாஸ் பகுதியினை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றனர். டான்பாஸ், லுகான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். நான்கு மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போரில் ரஷியப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. 

ரஷியப் படைகள் லுகான்ஸ்க் பகுதியை நெருங்கி விட்டன. உக்ரைன் தலைநகர் கீவ்-க்குப் பிறகு லுகான்ஸினை கைப்பற்றும் முனைப்பில் ரஷியப் படைகள் உள்ளன. டொனட்ஸ்கின் மேற்குப் பகுதியில் உள்ள லிமானை ரஷியப் படைகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் லிமானுக்கானப் போர் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

சிவியரோடொனட்ஸ்க் 60 கிலோ மீட்டர் தூரத்தில் லிமானுக்கு கிழக்கே அமைந்துள்ளது. இந்த சிவியரோடொனட்ஸ்க் மற்றும்  மிகப் பெரிய டான்பாஸ் இன்னும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. ரஷியப் படைகள் இந்த நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

ரஷியப் படைகளின் தாக்குதல் குறித்து லுகான்ஸின் ஆளுநர் கூறியதாவது, “ ரஷியப்படைகள் ஏற்கனவே சிவியரோடொனட்ஸ்கில் நுழைந்து விட்டன. இதனால் உக்ரைன் படைகள் எதிரி நாட்டுப் படைகளிடமிருந்து தப்பிக்க பின் வாங்கும் முயற்சியில் இறங்கலாம்.” என்றார். 

உக்ரைன் நாட்டின் அமைதிக்கான ஆலோசகர் மைகாய்லோ போடோலியாக், அமெரிக்காவிடமிருந்து தொலைதூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைக் கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு அமெரிக்க தரப்பில் ஏவுகணைகளை அனுப்புவது குறித்து ஆலோசிப்பதாகவும் விரைவில் அதற்கான முடிவு தெரியும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. 

ரஷியாவின் தாக்குதல் குறித்து உக்ரைன் நாட்டின் அமைதிக்கான ஆலோசகர் மைகாய்லோ போடோலியாக் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, “ எதிரி நாட்டுப் படைகள் 70 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தாக்குதல் நடத்தும் போது ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் போரிடுவது கடினம். உக்ரைனால் ரஷியப் படைகளை எதிர்த்துப் போரிட முடியும். ஆனால், அதற்கு எங்களுக்கு சக்தி வாய்ந்த ஆயதங்கள் தேவை.” எனப் பதிவிட்டுள்ளார். 

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியும் விடியோ மூலம் தங்கள் நாட்டுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

உலக நாடுகளுக்கு அதிக அளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று உக்ரைன். இந்த ரஷியா - உக்ரைன் போரினால் கோதுமை ஏற்றுமதி செய்யப்படாமல் உள்ளது. இதனால், உக்ரைனிடமிருந்து தனது உணவுத் தேவைக்காக கோதுமையை நம்பியுள்ள நாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் பலவும் பாதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com