ஆஸ்டின் டெக்ஸஸில் தீபாவளி மகா கொண்டாட்டம்!

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி மகா கொண்டாட்டம் டெக்ஸஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரத்தில் நவம்பர் 4, 5 என இரு நாள்கள் மிக கோலாகலமாக நடைபெற்றது.
ஆஸ்டின் டெக்ஸஸில் தீபாவளி மகா கொண்டாட்டம்!

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி மகா கொண்டாட்டம் டெக்ஸஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரத்தில் நவம்பர் முதல் வாரத்தில் இரு நாள்கள் மிக கோலாகலமாக நடைபெற்றது.

லிபெர்ட்டி ஹில் உயர்நிலைப் பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான கலை அரங்கத்தில் சுமார் 900 பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முதல் நாள் மாலை 6.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. வரவேற்புரைக்கு பின் கிருஷ்ணா எழுதி, இயக்கி, அவர் உட்பட அவரின் கலாலயா குழுவினரால் நடிக்கப்பெற்ற 'பாட்டி ஆனாலும் பார்ட்டி' என்ற முழு நீள நகைச்சுவை நாடகம் நடைபெற்றது. புயலுடன் கூடிய பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 700 பேர் வந்திருந்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மிகச் சுவையான 10 விதமான சைவ உணவு டப்பாக்களில் அடுக்கப்பட்டு, பைகளில் வைக்கப்பட்டு விழாவிற்கு வருகை தந்த அனைத்து பார்வையாளர்களுக்கு ம் வழங்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் இரண்டாம் நாள் விழா தொடங்கியது. வரவேற்புரைக்குப் பின் தொடங்கிய கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகப்பிரமாதமாய் இருந்தன. பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், ஒயிலாட்டம் மற்றும் நவீன நடனங்கள், பாட்டு கச்சேரி, வாத்தியக் கச்சேரி என பலவிதமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மூன்று நிகழ்ச்சிகளில் பெரியவர்களுடன் சிறுவர்களும் கலந்து கொண்டு பெரியவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்தனர்.

ஆரம்ப நிலை, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வார இறுதியில் தமிழ்ப் பள்ளி வகுப்பு முடிந்தவுடன் தன்னார்வத்துடன் இசையைக் கற்று இப்பொழுது ஒரு இசைக் குழுவே அமைத்துவிட்டனர். 25 சிறுவர்களும், பதின்ம வயது இளைஞர்களும் கொண்ட அந்த குழு தங்கள் இசைக் கருவிகள் மூலமும் தங்கள் குரல் வளத்தாலும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரையும் இசை மழையில் நனைத்து விட்டனர்.

நடனம் ஆடிய அனைத்து பெண்களும், ஆண்களும் தங்கள் அலுவலகப் பணியை முடித்துவிட்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு பல நாட்களாக மிகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டு மிகச்சிறப்பாக நடனம் ஆடினர். பாட்டு பாடியவர்களும் தங்கள் அதீத திறமையால் பார்வையாளர்களை கவர்ந்தனர். சூப்பர் சிங்கர் வெற்றியாளர் கிருஷ்ணமூர்த்தி மறறும் குழுவினரின் 1.30 மணி நேர இசை கச்சேரியை மக்கள் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர். 

1992 ஆம் ஆண்டு இந்த சங்கத்தைத் தொடங்கிய பேராசிரியர் முனைவர் சதாசிவன், முனைவர் வித்யாசங்கர், பஷீர்  ஆகியோரும், பல் மருத்துவர் மற்றும் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் புரவலர் சதீஷ் திருமலை ஆகியோர் விழாவிற்கு  சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு மேடையில் கௌரவிக்கப்பட்டனர். ஆஸ்டின் நகரத்திலும் அதன் அருகே உள்ள நகரங்களில் வசிப்பவர்களுக்கு என இரண்டு தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறைக்கு நம் தமிழ்மொழியை கற்றுத் தர வேண்டும் என்ற சேவை நோக்கத்துடன் இந்தப் பள்ளிகள் மிக, மிகக் குறைந்த கட்டணமே பெற்று மிகச்சிறந்த சேவையை செய்து வருவதைப் பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அந்த பள்ளியின் தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய செயற்குழு தாங்கள் பொறுப்பு ஏற்ற கடந்த 8  மாதங்களில்  செய்த பணிகளை பற்றியும் பேசினார்கள். நன்றியுரை முடிந்தவுடன் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தமிழ் பாரம்பரியமான வடை பாயசத்துடன் முழுமையான சைவ விருந்து பரிமாறப்பட்டது.

மின்னணு நுழைவுச் சீட்டுகளை சரிபார்த்து பார்வையாளர்களை உள்ளே அனுமதிப்பதில் தொடங்கி இரண்டு நாட்களும் உணவகத்தில் வாங்கப்பட்ட உணவு வகைகளை பெட்டிகளில் நிரப்பி பைகளில் வைத்தது முதல் பார்வையாளர்களுக்கு பரிமாறியது வரை  தன்னார்வலர்களே தங்கள் இல்லத்து விழாவாக மகிழ்ச்சியுடன் செய்தனர்.

ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான  சஞ்சய், மகாலெட்சுமி, சக்திவேல், மஹாதேவன், ஜனனி, முகேஷ், ராஜசேகர் அனைவரும் விழாவை ஒருங்கிணைத்தனர்.

சுவையான இரவு விருந்துடன் விழா 8.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது. வாயிலில் தொடங்கி அரங்கம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த வளாகத்தில் விளம்பரதாரர்களும், சிறு நிறுவனங்களும் தற்காலிக கடை அமைத்திருந்தது வளாகத்தை மென்மேலும் கலகலப்பாகவும் பரபரப்பாக்கவும்  ஆக்கியது. இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு சுமார் 900 பார்வையாளர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com