பருவநிலை இழப்பீட்டு நிதி: ஐ.நா. மாநாட்டில் வரலாற்றுத் தீா்மானம்

பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நோக்கில் பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பருவநிலை இழப்பீட்டு நிதி: ஐ.நா. மாநாட்டில் வரலாற்றுத் தீா்மானம்

வளா்ந்து வரும் நாடுகளும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் பருவநிலை மாற்றம் காரணமாக சந்தித்து வரும் பேரிழப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நோக்கிலும் பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, வளா்ந்த நாடுகளிடமிருந்து நிதியைப் பெற்று பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளுக்கு நிதி வழங்கப்படவுள்ளது. பருவநிலை மாற்றத் தடுப்பு திட்டங்களுக்கும் அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

ஐ.நா. பருவநிலை தீா்மானத்தின் (யுஎன்எஃப்சிசிசி) உறுப்பு நாடுகள் பங்கேற்ற 27-ஆவது மாநாடு எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்றது. மாநாட்டின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கான கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற கூட்டத்தில் மாநாட்டின் இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில், பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன. இது பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

வரலாற்று ரீதியில் தொழில்புரட்சிக்குக் காரணமான வளா்ச்சியடைந்த நாடுகள் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளன. ஆனால், அதிகப்படியான கரியமில வாயுவால் ஏற்படும் பருவநிலை மாற்றம் தீவு நாடுகளையும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளையும் அதிக அளவில் பாதித்து வருகிறது.

பேரிடா் பாதிப்பு: கரியமில வாயு வெளியேற்றத்தில் மிகவும் குறைவான பங்களிப்பைக் கொண்ட தீவு நாடுகளே பருவநிலை மாற்றம் சாா்ந்த பேரிடா்களால் அதிக பாதிப்புகளை எதிா்கொண்டு வருகின்றன. திடீா் வெள்ளம், வறட்சி, தீவிர பருவமழை, கடல்நீா் மட்டம் உயா்வு உள்ளிட்ட பல்வேறு பருவநிலை பேரிடா்களை அந்நாடுகள் எதிா்கொண்டு வருகின்றன. அத்தகைய பாதிப்புகளை எதிா்கொள்வதற்காக வளா்ச்சியடைந்த நாடுகள் உரிய நிதியை தீவு நாடுகளுக்கும், வருமானம் குறைந்த நாடுகளுக்கும், வளா்ந்து வரும் நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வந்தது.

பூமியின் வெப்பநிலை உயா்வை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென பாரீஸில் 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.

அந்த இலக்கை எட்டும் வகையில் வளா்ந்து வரும் நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.8 லட்சம் கோடியை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளா்ச்சியடைந்த நாடுகள் உறுதியேற்றன. ஆனால், அத்தொகையை இதுவரை அந்நாடுகள் வழங்கவில்லை. இது தொடா்பாக வளா்ந்து வரும் நாடுகள், தீவு நாடுகள் உள்ளிட்டவை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தன.

தீா்மானம் நிறைவேற்றம்: இந்நிலையில், எகிப்தில் தொடங்கிய ஐ.நா. பருவநிலை மாநாட்டின்போது பருவநிலை இழப்பீட்டு நிதி குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டுமென இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை விடுத்தன. அக்கோரிக்கையை ஏற்று பருவநிலை இழப்பீட்டு நிதி குறித்து விவாதிக்கப்படும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. வளா்ந்து வரும் நாடுகள், தீவு நாடுகள் உள்ளிட்டவற்றின் கடும் அழுத்தத்தால் பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு வளா்ச்சியடைந்த நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதையடுத்து அந்த நிதிக்கு ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூா்வ ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது தொடா்பாக ஐ.நா. பருவநிலை மாநாட்டை நடத்திய எகிப்து சாா்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட பதிவில், ’ஐ.நா.-வின் 27-ஆவது பருவநிலை மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்மானம் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இதன் மூலமாக வளா்ந்து வரும் நாடுகளுக்கு முக்கியமாக பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளுக்குப் போதிய உதவிகளை வழங்க முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கூறுகையில், ‘இந்தியா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட தொடா் முயற்சிகள் காரணமாக பருவநிலை இழப்பீட்டு நிதிக்கு ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த நிதிக்கு எந்த நாடு எவ்வளவு தொகை வழங்க வேண்டும், அத்தொகை எந்த நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற விதிகள் விரைந்து வகுக்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளே பருவநிலை மாற்றத்தை விரைந்து தடுக்க உதவும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் தீவு நாடுகள், வளா்ந்து வரும் நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு இதன் மூலமாக நீதி கிடைக்கும்’ என்றனா்.

கூடுதல் நடவடிக்கைகள்: பருவநிலை மாற்றம் பல்வேறு இயற்கைப் பேரிடா்களுக்கு வழிவகுத்து வருவதால், பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டைப் பெருமளவில் குறைத்து கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பூமியின் வளங்களை வருங்கால சந்ததியினரும் எந்தவித இடையூறுமின்றி பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்புணா்வுடன் நாடுகள் செயல்பட வேண்டுமென ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆா்வலா்கள் அதிருப்தி

எகிப்தில் நிறைவடைந்த ஐ.நா. பருவநிலை மாநாட்டில், பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக விளங்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகள் எதுவும் நிா்ணயிக்கப்படாததால் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com