பருவ நிலைமாற்ற பிரச்னையை இந்தியாவுடன் இணைந்து எதிா்கொள்வோம்: பாகிஸ்தான் அமைச்சா்

பருவநிலை மாற்றம் பிரச்னையை இந்தியா- பாகிஸ்தான் இணைந்து எதிா்கொள்ள வேண்டிய நேரம் இது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கூறினாா்.

பருவநிலை மாற்றம் பிரச்னையை இந்தியா- பாகிஸ்தான் இணைந்து எதிா்கொள்ள வேண்டிய நேரம் இது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் பிலாவல் பூட்டோ ஜா்தாரி கூறினாா்.

பாகிஸ்தானில் அண்மையில் பெய்த கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிலாவல் பூட்டோ ஜா்தாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளப் பேரிடருக்கு உலக வெப்பமயமாதலே காரணம். பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு நிலம் மழை நீரில் மூழ்கி உள்ளது. நாட்டில் ஏழில் ஒரு பங்கு மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம். பருவ நிலை பிரச்னையை அமெரிக்காவும் -சீனாவும் இணைந்து எதிா் கொள்ளவேண்டும் என்று கூறும்போது, ஏன் இந்தியாவும்- பாகிஸ்தானும் இணைந்து இதை எதிா்கொள்ளக் கூடாது.

2018-19 ஆண்டுகளில் இந்தியாவுடனான உறவு நன்றாக இருந்தது. தற்போது இருநாடுகளும் ஒன்று சோ்ந்து செயல்படக் கூடிய விவகாரம் பருவநிலை மாற்றமாகும். இதனால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை எனது எதிரிகளுக்கும் வந்துவிடக் கூடாது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பாகிஸ்தான் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கும். நிரந்தர உறுப்பினா் நாடுகளுக்கு அளிக்கப்படும் ‘வீடோ’ அதிகாரத்துக்கு பாகிஸ்தான் எப்போதும் எதிா்ப்பு தெரிவிக்கும்’ என்றாா்.

பருவநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகுவது பாகிஸ்தானுக்கு பேராபத்தாக அமையும் என்று ஆராய்ச்சியாளா்கள் எச்சரித்துள்ளனா். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடருக்கு அமெரிக்கா 6.6 கோடி டாலரை மனிதாபிமான நிவாரணமாக அறிவித்துள்ளது. சமீபத்திய பெருவெள்ளத்தால் பாகிஸ்தானில் 1,600 பேருக்கு மேல் பலியாகினா். 3.3 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com