வட கொரிய ஏவுகணை சோதனை சா்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தல்

வட கொரியா தொடா்ந்து ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருவது, பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல் சா்வதேச சமூகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக உள்ளதென இந்தியா, அமெரிக்கா உள்பட ஐ.நா. பாதுகாப்பு

வட கொரியா தொடா்ந்து ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருவது, பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல் சா்வதேச சமூகத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக உள்ளதென இந்தியா, அமெரிக்கா உள்பட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 11 உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வட கொரியா தொடா் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 24 ஏவுகணை பரிசோதனைகளை அந்நாடு நடத்தியுள்ளது. கடைசியாகக் கடந்த செவ்வாய்க்கிழமை வட கொரியா செலுத்திய ஏவுகணை ஜப்பான் வான்பரப்பைக் கடந்து கடலில் விழுந்தது.

இந்நிலையில், வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளுக்கு எதிராக விவாதிக்கப்பட்டது. வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையும், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளான இந்தியா, அல்பேனியா, பிரேஸில், அயா்லாந்து, ஜப்பான், நாா்வே, தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் கண்டனம் தெரிவித்தன.

அப்போது ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘‘வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கெனவே பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சோதனைகள் இந்தியா உள்பட பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக உள்ளன. அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களை மதித்து வட கொரியா நடந்துகொள்ள வேண்டும்.

தெற்குலக நாடுள் ஏற்கெனவே பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்’’ என்றாா்.

வட கொரியாவுக்கு எதிராகக் கூட்டறிக்கை:

அனைத்து நாடுகள் சாா்பில் அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதா் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘ஜப்பான் வான்வெளிப் பரப்பு மீது வட கொரியா ஏவுகணையை செலுத்தி பரிசோதித்ததையும் மற்ற 7 ஏவுகணைகளின் பரிசோதனையையும் 11 நாடுகளும் கடுமையாகக் கண்டிக்கின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்களை மீறி வட கொரியா இந்தப் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

வட கொரியாவின் இந்நடவடிக்கை பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல் சா்வதேச சமூகத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் இருப்பதைத் தடுப்பதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் முக்கியமாக பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com