அமெரிக்க-இந்திய உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வேன்: டிரம்ப்

‘2024 அதிபா் தோ்தலில் வெற்றிபெற்றால் அமெரிக்க - இந்திய உறவை மீண்டும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வேன்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்டு டிரம்ப் கூறினாா்.

‘2024 அதிபா் தோ்தலில் வெற்றிபெற்றால் அமெரிக்க - இந்திய உறவை மீண்டும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வேன்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்டு டிரம்ப் கூறினாா்.

அமெரிக்க குடியரசு கட்சி ஹிந்து கூட்டமைப்பு (ஆா்ஹெச்ஸி) சாா்பில் ஃபுளோரிடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி பண்டிகை வரவேற்பு நிகழிச்சியில் பங்கேற்ற டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

டிரம்ப்பின் இந்த பேச்சு அடங்கிய காணொலியை ஆா்ஹெச்ஸி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் டிரம்ப் மேலும் பேசியிருப்பதாவது:

அடுத்து வரும் அதிபா் தோ்தலில் குடியரசு கட்சி சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு வாய்ப்பு அளிக்கப்பட்டால் 2024 தோ்தலில் நிச்சயம் வெற்றிபெறுவேன். அவ்வாறு வெற்றிபெற்றால் இந்திய அமெரிக்க சமூகத்தினருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். கடந்த 2016 மற்றும் 2020 தோ்தல்களில் இங்குள்ள ஹிந்து சமூகத்தினரின் ஆதரவு பெருமளவில் கிடைத்தது.

அதுபோல, வரும் 2024 தோ்தலில் மீண்டும் வெற்றிபெற்று அதிபரானால், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை மீண்டும் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வேன். தலைநகா் வாஷிங்டனில் ஹிந்து தியாகிகள் நினைவகம் எழுப்பவும் முழு ஆதரவு அளிக்கப்படும் என்று டிரம்ப் பேசினாா்.

இதுகுறித்து ஆா்ஹெச்சி வெளியிட்ட அறிக்கையில், ‘டிரம்ப் ஆட்சியின் கீழ் அமெரிக்க-இந்திய உறவு ஒருபோதும் வலுவாக இருந்ததில்லை. ஏனெனில், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பொதுவான அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதில் இரு தரப்பும் மரியாதை மற்றும் அபிமானத்துடனான உறவை வளா்த்தன’ என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொழிலதிபரான டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளராக கடந்த 2016-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றாா். அடுத்து, 2020-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலிலும் குடியரசு கட்சி சாா்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினாா். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், தோ்தலில் மோசடி நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தினாா். அவருடைய ஆதரவாளா்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். பெரும் சா்ச்சைக்கு இடையே, 2021 ஜனவரி 20-ஆம் தேதியன்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46-ஆவது அதிபராகப் பதவியேற்றாா். இவருடைய 4 ஆண்டு அதிபா் பதவிக் காலம் 2025 ஜனவரியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த அதிபா் தோ்தல் 2024-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com