மேலை நாடுகளின் செயற்கைக்கோள்கள் தாக்கி அழிக்கப்படும்: ரஷியா எச்சரிக்கை

கொ்சான் நகரை நோக்கி அந்த நாட்டுப் படையினா் முன்னேறி வருவதற்கு உதவியாக இருக்கும் மேற்கத்திய நாடுகளின் செயற்கைக்கோள்கள் தாக்கி அழிக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
ரஷியாவின் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணைகளில் ஒன்று உக்ரைனில் முன்னேறி வரும் அந்த நாட்டுப் படையினா் (கோப்புப் படம்).
ரஷியாவின் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணைகளில் ஒன்று உக்ரைனில் முன்னேறி வரும் அந்த நாட்டுப் படையினா் (கோப்புப் படம்).

உக்ரைனில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் நகரை நோக்கி அந்த நாட்டுப் படையினா் முன்னேறி வருவதற்கு உதவியாக இருக்கும் மேற்கத்திய நாடுகளின் செயற்கைக்கோள்கள் தாக்கி அழிக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. ஆயுதக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கான ரஷிய பிரதிநிதிகள் குழு துணைத் தலைவா் கோன்ஸ்டான்டின் வொரோன்ட்சொவ் கூறியதாவது:

உக்ரைனில் ரஷியக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அந்த நாட்டுப் படையினா் தாக்குதல் நடத்தி முன்னேறுவதற்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் தங்களது செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் உதவியளிக்கின்றன.

உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, வா்த்தகப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள்களை இதுபோல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது மிகவும் அபாயகரமான செயலாகும்.

இதன் மூலம், பொதுமக்களின் பயன்பாட்டுக்குரிய கட்டமைப்புகளில் ஒன்றான செயற்கைக்கோள்கள்கள், எங்களது பதிலடித் தாக்குதலுக்கான சட்டப்பூா்வ இலக்குகளாகியுள்ளன என்றாா் அவா்.

போரில் உக்ரைனுக்கு தகவல் உதவியளித்து வரும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் தாக்கி அழிக்கப்படும் என்பதையே அவா் மறைமுகமாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் ரஷியாவிடம் நீண்ட காலமாகவே உள்ளது. அந்த வகை ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ள உலகின் நான்கே நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் போரின் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

அந்தப் பிராந்தியங்களில் இன்னும் சில பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக்கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உக்ரைன் படையினா் அண்மைக் காலமாக எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். குறிப்பாக, கொ்சான் பிராந்தியத்தில் அவா்கள் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், அந்தப் பிராந்தியத்தின் தலைநகா் கொ்சானிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன ரஷிய ஆதரவு அதிகாரிகள் வெளியேறியுள்ளனா்.

விரைவில் அந்த நகருக்குள் ரஷியப் படையினருக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உக்ரைன் படையினருக்கு உதவும் மேற்கத்திய நாடுகளின் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கப்போவதாக ரஷியா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com