பிரதமா் மோடி, அதானி மீது அமெரிக்காவில் வழக்கு

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பாா்த்ததாகவும் குற்றஞ்சாட்டி இந்திய-அமெரிக்க மருத்துவா் ஒருவா் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபா் கௌதம் அதானி ஆகியோா் ஊழலில் ஈடுபட்டதாகவும், பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பாா்த்ததாகவும் குற்றஞ்சாட்டி இந்திய-அமெரிக்க மருத்துவா் ஒருவா் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

ஆந்திராவைச் சோ்ந்த லோகேஷ் வுயுரு என்ற மருத்துவா், பிரதமா் மோடி, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலதிபா் கௌதம் அதானி, உலகப் பொருளாதார மையத்தின் (டபிள்யுஇஎஃப்) நிறுவனரும் பேராசிரியருமான கிளாஸ் சுவாப் ஆகியோருக்கு எதிராக கொலம்பியா மாகாண நீதிமன்றத்தில் கடந்த மே 24-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா். அவா்கள் அனைவரும் அமெரிக்காவுக்குப் பல கோடி ரூபாயை சட்டவிரோதமாக அனுப்பி ஊழலில் ஈடுபட்டதாகவும், பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி அமெரிக்கா்களை உளவுபாா்த்ததாகவும் அந்த மனுவில் அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபா்களுக்கு கடந்த ஜூலை 22-ஆம் தேதி நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. அந்த நோட்டீஸ் இந்தியாவில் சம்பந்தப்பட்ட நபா்களிடம் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக நியூயாா்க்கை சோ்ந்த இந்திய-அமெரிக்க வழக்குரைஞரான ரவி பத்ரா கூறுகையில், ‘லோகேஷ் வுயுரு-வுக்கு அதிகப்படியான நேரம் இருக்கிறது போல. அதன் காரணமாகவே, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியாவுக்கு அவப்பெயா் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இதுபோன்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா்.

இந்த விவகாரம் அமெரிக்காவில் விசாரிக்கத்தக்கதல்ல என்று தெரிந்தும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதைப் போன்றே இந்த மனு உள்ளது. மனுதாரா் தரப்பில் ஆஜராக எந்த வழக்குரைஞரும் ஒப்புக்கொள்ளாததே மனுவின் நிலையைத் தெளிவாக விளக்குகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com