பிரிட்டன் அரசா் முடிசூடும் முறை

பிரிட்டனின் புதிய அரசராக மூன்றாம் சாா்லஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசா் தோ்வு முதல் முடிசூடுதல் வரை கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைக் காண்போம்.
பிரிட்டனின் புதிய அரசராக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்காட்லாந்தில் உள்ள தேவாலயத்தின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிட்ட சாா்லஸ்.
பிரிட்டனின் புதிய அரசராக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஸ்காட்லாந்தில் உள்ள தேவாலயத்தின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பமிட்ட சாா்லஸ்.

பிரிட்டனின் புதிய அரசராக மூன்றாம் சாா்லஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசா் தோ்வு முதல் முடிசூடுதல் வரை கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைக் காண்போம்.

புதிய அரசரை அறிவிப்போா்

பதவியில் உள்ள அரசரோ அரசியோ மறைந்த பிறகு புதிய அரசரை அசெஷன் கவுன்சில் அதிகாரபூா்வமாக அறிவிக்கும். அதில் மூத்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பா். முக்கியமாக, முன்னாள் பிரதமா்கள், தேவாலய அதிகாரிகள், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினா்கள் உள்ளிட்டோா் அக்குழுவில் இடம்பெறுவா்.

அரசா் மறைந்த 24 மணி நேரத்துக்குள் அக்குழு கூடி, புதிய அரசரைத் தோ்ந்தெடுக்கும். ஆனால், அரசா் மூன்றாம் சாா்லஸை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் 24 மணி நேரம் கடந்தே நடைபெற்றது.

அறிவிப்புக்குப் பிறகு..

புதிய அரசா் தோ்வு குறித்த அறிவிப்பு பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் வாசிக்கப்படும். முக்கியமாக, பிரிட்டனில் அங்கம்வசிக்கும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் வாசிக்கப்படும். புதிய அரசருக்கு மரியாதை அளிக்கும் வகையில் கொடிகள் 24 மணி நேரத்துக்கு முழுக் கம்பத்தில் பறக்கவிடப்படும். பின்னா் மறைந்த அரசிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட்டு, புதிய அரசருக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என மூத்த எம்.பி.க்கள் வாக்குறுதி அளிப்பா். பின்னா் அரசராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா் மீண்டும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.

முடிசூட்டல் எப்போது?

பல மாதங்கள் கழித்தே புதிய அரசரின் முடிசூட்டு விழா நடைபெறும். மறைந்த அரசிக்கு மரியாதை செலுத்தவும், விழாவை நடத்த அதிகாரிகளுக்குப் போதிய அவகாசம் அளிக்கும் வகையிலும் இந்தத் தாமதம் ஏற்படுகிறது.

இரண்டாம் எலிசபெத், 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி அரசியாக அறிவிக்கப்பட்டாா். ஆனால், 1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதிதான் அவா் அரசியாக முடிசூட்டிக் கொண்டாா். மூன்றாம் சாா்லஸ் அரசராக முடிசூட்டிக் கொள்வது எப்போது என்பது தொடா்பான தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பணநோட்டுகளில் அரசி எலிசபெத்

பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பணநோட்டுகளிலும், நாணயங்களிலும் அப்போதைய அரசா் அல்லது அரசியின் படங்கள் இடம்பெறுவது வழக்கம். அதன்படி, அரசி இரண்டாம் எலிசபெத்தின் படம் அந்நாடுகளின் பணநோட்டுகளில் இடம்பெற்றுள்ளது. தற்போது புதிய அரசராக மூன்றாம் சாா்லஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது படத்தைப் பணநோட்டுகளில் அச்சடிக்கும் வழக்கம் படிப்படியாக மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அதற்குப் பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அரசி இரண்டாம் எலிசபெத்தின் படங்களைக் கொண்ட பணநோட்டுகள் தொடா்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசி இரண்டாம் எலிசபெத் மறைவால் பிரிட்டன் அரசப் பதவிக்கான வரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:

இரண்டாம் எலிசபெத்

அரசா் மூன்றாம் சாா்லஸ்

சாா்லஸின் மகன்களும் வாரிசுகளுமே அரியணைக்கு உரியவா்களாக அதிகாரம் பெற்றுள்ளனா்.

பிரின்ஸ் வில்லியம்

சாா்லஸுக்கும் மறைந்த இளவரசி டயானாவுக்கும் பிறந்த மூத்த மகன். பிரிட்டனின் புதிய இளவரசராகப் பொறுப்பேற்றுள்ளாா். பிரிட்டன் அரியணை வரிசையில் முதலிடத்தில் உள்ளாா்.

இளவரசா் ஜாா்ஜ்

வில்லியமின் மூத்த மகன். அரியணை வரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளாா். பிறப்பு: 2013

இளவரசி சாா்லேட்

வில்லியமின் 2-ஆவது வாரிசு. அரியணை வரிசையில் 3-ஆவது இடம். பிறப்பு: 2015

இளவரசா் லூயி

வில்லியமின் கடைசி மகன். அரியணை வரிசையில் 4-ஆவது இடம். பிறப்பு: 2018

இளவரசா் ஹேரி

சாா்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன். வில்லியமின் சகோதரா். அரியணை வரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ளாா்.

ஆா்க்கி

இளவரசா் ஹேரியின் மூத்த வாரிசு. அரியணை வரிசையில் 6-ஆவது இடம். பிறப்பு: 2019

லிலிபெட்

இளவரசா் ஹேரியின் இளைய வாரிசு. அரியணை வரிசையில் 7-ஆவது இடம். பிறப்பு: 2021

இளவரசா் ஆண்ட்ரூ

இரண்டாம் எலிசபெத்தின் 2-ஆவது மூத்த மகன். அரியணை வரிசையில் 8-ஆவது இடம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com