பாகிஸ்தான் மருத்துவமனைகளில் ஒன்றுமே இல்லை: அபாய நிலையில் கர்ப்பிணிகள்

பாகிஸ்தான் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவ உதவி தேவைப்படும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களின் நிலை அபாயத்தில் உள்ளது.
அபாய நிலையில் கர்ப்பிணிகள்
அபாய நிலையில் கர்ப்பிணிகள்

கடும் வெள்ளத்தில் சிக்கியருக்கும் பாகிஸ்தான் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவ உதவி தேவைப்படும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களின் நிலை அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் எச்சரித்துள்ளது.

பல இடங்களில் மருத்துவமனைகளைக் கூட வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டிருக்கிறது. தப்பித்திருக்கும் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகளும் மருந்துகளும் இல்லை.

பிரசவ வலியுடன் நிறைமாத கர்ப்பிணி நஸீபா அமீருல்லா ஆம்புலன்ஸ் கூட கிடைக்காமல், வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் சாலைகளைக் கடந்து பலோசிஸ்தான் மாகாணத்திலிருந்து 12 மணி நேர பயணத்துக்குப் பின் குவெட்டாவை அடைகிறார்.

மருத்துவமனையை அடைந்ததும் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நஸீபாவுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இது பற்றி அவரே பேச முடியாமல் நா தழுதழுக்கக் கூறியதாவது, எனக்கு குழந்தை பிறந்து 2 நாள்கள் ஆகிறது. குழந்தை இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த மருத்துவமனையில் அந்த வசதி இல்லை. அதனால் வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். இதுவரை நான் என் குழந்தையைப் பார்க்கவேயில்லை என்கிறார் கண்ணீருடன்.

பாகிஸ்தானில் கர்ப்பிணிகளின் உடல்நலம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியிருப்பதாகவும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை சொன்ன அந்த கர்ப்பிணிகளில் அமீரூல்லாவும் ஒருவர்.

பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் பாதித்த பலோசிஸ்தான் மற்றும் சிந்து பகுதிகளில் நிறைமாத கர்ப்பிணிகளும் வெள்ளத்தின் கோரப்பிடிக்கு இடையே குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்களும் தங்களது நிலையை விளக்க வேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறது அவர்களது நிலை.

பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்க, இதுவரை 1,400 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 3 கோடியே 30 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் எனும் ஒரு நாட்டின் ஒரு பகுதியையே வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்று சொன்னால் அது நிச்சயம் மிகையாகாது. சாலைகள், பாலங்கள், வீடுகள் என எந்த ஒரு கட்டமைப்பையும் வெள்ளம் விட்டுச்செல்லவில்லை. அனைத்தையும் அடித்துச் சென்று குப்பைக்கூளங்களாக நிறுத்தியிருக்கிறது. அங்கிருக்கும் மனிதர்களின் வாழ்வைப்போலவே.

இந்த நிலையில்தான், ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அளித்திருக்கும் புள்ளிவிவரம் கதிகலங்க வைக்கிறது. பாகிஸ்தானில் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 73 ஆயிரம் கர்ப்பிணிகள் குழந்தைப் பேறுக்காக மருத்துவமனையை நாடுவார்கள் என்றும் அவர்களுக்கும், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவிகளும் தேவைப்படுகிறது.

அது மட்டுமல்ல, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மட்டும் சுமார் 6,50,000 கர்ப்பிணிகள் மருத்துவ வசதிக்காக காத்திருக்கிறார்கள் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, புதிதாகப் பிறக்கும் மற்றும் பிறந்து ஒரு சில மாதங்களேயான பச்சிளம் குழந்தைகளுக்கு வெள்ள பாதிப்பினால் நோய்கள் தாக்கும் அபாயம் விஸ்வரூபம் எடுக்கும் நிலை உள்ளது.

வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதால், சிந்து மாகாணத்தில் லர்கானா முதல் தாது வரை, பலோசிஸ்தானின் ஜஃப்ராபாத் மற்றும் நஸீராபாத் மாவட்டங்களில் துணி மற்றும் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குடில்களில்தான் மக்கள் வசிக்கிறார்கள்.

இந்த வெள்ளம் வெறும் வீடுகளை மட்டுமல்ல, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறிய மருத்துவமமனைகள் என 1,460 மருத்துவமனைகளையும் பாதித்துள்ளது. இதனால், வெள்ளம் பாதித்த மக்களுக்கு மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாகியிருக்கிறது.

அப்படியே மருத்துவமனைகள் இருந்தாலும், அங்கு எதுவுமே இருக்கவில்லை. பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுடன் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மருந்துகளை எழுதிக் கொடுக்கத்தான் முடிகிறதே தவிர, எந்த மருந்தும் அங்கி இருக்கவில்லை. தங்களால் கடைகளில் மருந்துகளை வாங்கிச் சாப்பிட முடியாத நிலையில், மருந்துச் சீட்டினைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள்.

உடனடியாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு போர்க்கால நடவடிக்கையாக, அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க முன் வர வேண்டும். மேலும் மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டுத்தராவிட்டால், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் இது பற்றி கூறுகையில், கர்ப்பிணிகள் பலரும் வெள்ளத்தால் மருத்துவமனைக்கு வர முடியாமல், சாலைகளிலும், வாகனங்களிலும் குழந்தை பிறக்கும் நிலை உருவாகியுள்ளது. தற்போது குறைப்பிரசவங்களும் அதிகரித்துள்ளன. கர்ப்பிணிகள் வெள்ளத்தால் மருத்துவமனைக்கே வர முடியாத நிலைகூட இருக்கிறது. பல இடங்களில் இருக்கும் இடத்திலேயே பிரசவம் பார்க்க செவிலியர்கள் வரவழைக்கப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் சரியான உணவு கிடைக்காமல் அவதியடைகிறார்கள். பிறந்த குழந்தைக்கு துணி கூட இல்லாமல், ஒற்றை ஆடையுடன் வீட்டிலிருந்து புறப்பட்ட கர்ப்பிணி, பிறந்த குழந்தையை அழுக்கடைந்த துணியால் போர்த்தி வைத்திருக்கிறார்.

பெண்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்காதது ஒரு பக்கம், உணவுப் பற்றாக்குறை, வெள்ளத்தால் ஏற்படும் தொற்று நோய்கள் என இயற்கைப் பேரிடரின் தொடர்ச்சி பாகிஸ்தான் நாட்டு பெண் சமுதாயத்தையே வாட்டிவதைக்கும் நிலையில், வீடுகளை இழந்து ஓரிடத்தில் மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நிலையில், பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.

இதனால், பாகிஸ்தானில் நிலவும் மருத்துவ நெருக்கடியை உடனடியாக சமாளிக்காவிட்டால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், அந்நாட்டு மக்கள் தொகையை இது பெரிய அளவில் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com