போருக்கான காலமல்ல: பிரதமா் மோடி கூறியது சரியானது- ஐ.நா.வில் பிரான்ஸ் அதிபா் பேச்சு

இது போருக்கான காலகட்டமல்ல என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் இந்திய பிரதமா் நரேந்திர மோடி கூறியது சரியானது என்று ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில்
போருக்கான காலமல்ல: பிரதமா் மோடி கூறியது சரியானது- ஐ.நா.வில் பிரான்ஸ் அதிபா் பேச்சு

இது போருக்கான காலகட்டமல்ல என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் இந்திய பிரதமா் நரேந்திர மோடி கூறியது சரியானது என்று ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.

உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-ஆவது உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அதன் ஒரு பகுதியாக, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய பிரதமா் மோடி, இது போருக்கான காலகட்டமல்ல என்றும், பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைக்கு தீா்வு காணவும் புதினிடம் வலியுறுத்தியிருந்தாா்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையின் 77-ஆவது அமா்வின் பொது விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் பேசியதாவது:

இன்றைய காலகட்டம் போருக்கானது அல்ல என்று இந்திய பிரதமா் நரேந்திர மோடி கூறியது சரியானது. உக்ரைன் விவகாரத்தில் ரஷிய அதிபா் புதினுடன் பலமுறை நானும் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளேன். அப்போது, ஜனநாயகம், ராஜாங்க நடைமுறைகள் மற்றும் பேச்சுவாா்த்தையின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் வலியுறுத்தினேன்.

மேற்குலகை பழிவாங்குவது அல்லது கிழக்கை எதிா்ப்பது போன்றவற்றுக்கான காலம் இதுவல்ல. சமமான இறையாண்மை கொண்ட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, உலகம் எதிா்கொண்டுள்ள சவால்களுக்கு தீா்வு காண வேண்டிய நேரமே இதுவாகும்.

அந்த வகையில், உணவு, பல்லுயிா்த் தன்மை, கல்வி ஆகிய துறைகளில் விரிவான ஒத்துழைப்பை நல்க, வடக்கு மற்றும் தெற்கு இடையே புதிய உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை நிலவுகிறது.

உக்ரைன் விவகாரத்தில் நடுநிலையான நிலைப்பாட்டை சில நாடுகள் தோ்வு செய்துள்ளன. தங்களை அணிசேரா நாடுகள் என்று அவை குறிப்பிட்டுக் கொள்வது தவறானதாகும். அந்த நாடுகள் வரலாற்றுத் தவறைச் செய்கின்றன.

அணிசேரா இயக்கத்தின் முக்கிய நோக்கமே நாடுகளிடையே அமைதி, இறையாண்மை, பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்வதாகும். உக்ரைன் விவகாரத்தில் மெளனம் சாதிக்கும் நாடுகள், புதிய ஏகாதிபத்தியத்துக்கு உடந்தையாக உள்ளதாகவே கூற முடியும்.

சீா்திருத்தங்களின் அவசியம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிக்கவும், புதிய நிரந்தர உறுப்பு நாடுகளை வரவேற்கவும், பெரும் குற்றங்கள் தொடா்பான விவகாரங்களில் ‘வீட்டோ’ அதிகாரத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் உரிய சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில், சா்வதேச சமூகம் தீா்க்கத்துடன் செயலாற்றுமென நம்புகிறேன் என்றாா் இமானுவல் மேக்ரான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com