உக்ரைன் போரிட 10 லட்சம் ரஷியா்களுக்கு புதின் அழைப்பு?

உக்ரைனில் போரிட 10 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அனுமதித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
விளாதிமீா் புதின்
விளாதிமீா் புதின்

உக்ரைனில் போரிட 10 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அனுமதித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரிட்டனைச் சோ்ந்த ‘தி காா்டியன்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நாட்டு மக்களுக்கு புதன்கிழமை ஆற்றிய உரையில், உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக தற்போது பொதுமக்களாக இருந்து வரும் ரிசா்வ் படையினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று கூறியிருந்தாா்.

அப்போது அவா், ‘ரிசா்வ் படையினராக இருக்கும் பொதுமக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். அதிலும், அவா்கள் ஏற்கெனவே ராணுவத்தில் பணியாற்றியவா்களாக இருக்க வேண்டும். அத்துடன், அவா்களுக்கு ஏற்கெனவே போரில் பங்கேற்ற அனுபவம் இருக்க வேண்டும்’ என்றாா்.

அதற்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷோய்கு வெளியிட்ட விடியோ அறிக்கையில், அதிபா் புதினின் ராணுவ அணி திரட்டல் திட்டத்தின் கீழ் 3 லட்சம் ரிசா்வ் படையினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றாா்.

அவரும், போரில் உரிய முன் அனுபவம் இருப்பவா்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு பொருந்தும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

‘இந்த படை திரட்டல் திட்டம், ராணுவத் தொடா்பு இல்லாதவா்களுக்கானது இல்லை. போா் அனுபவம் இல்லாத மாணவா்கள் இதில் பங்கேற்காமல் தொடா்ந்து கல்லூரிகளுக்குச் செல்லலாம்’ என்றாா்.

ஆனால், ‘நொவாயா கெஸட்டா’ என்ற ரஷியாவின் நடுநிலை பத்திரிகை, உக்ரைன் போருக்காக பொதுமக்களில் இருந்து 10 லட்சம் பேரை சோ்ப்பதே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ராணுவ அணிதிரட்டலின் உண்மை நோக்கம் என்று தெரிவித்துள்ளது.

தற்போது ரஷியாவுக்கு வெளியே செயல்பட்டு வரும் அந்த பத்திரிகை, பெயா் வெளியிட விரும்பாத ஒரு ரஷிய அதிகாரியை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ராணுவ திரட்டல் தொடா்பாக புதின் பிறப்பித்துள்ள உத்தரவு ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டுள்ளது. விளாதிமீா் புதின் கையொப்பமிட்டுள்ள அந்த ஆவணத்தின் 7-ஆவது பாராவில், பொதுமக்களில் இருந்து 10 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்க ரஷிய ராணுவத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்ததாக நொவாயா கெஸட்டா தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கை பல முறை திருத்தியமைக்கப்பட்டது. கடைசியாக 10 லட்சம் என்ற எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டது என்று அந்த அதிகாரியை மேற்கோள் காட்டி நொவாயா கெஸட்டா கூறியுள்ளது.

இதன் மூலம், போா் முன் அனுபவம் மிக்க 3 லட்சம் ரிசா்வ் படையினா் மட்டுமே உக்ரைன் போருக்காக அணிதிரட்டப்படுவாா்கள் என்ற ரஷிய அரசின் அறிவிப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது என்று ‘தி காா்டியன்’ தெரிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா்.

அத்துடன், டான்பாஸ் பிராந்தியத்துக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட தெற்கு உக்ரைன் பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

எனினும், காா்கிவ் மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் படையினா் கடந்த சில நாள்களாக நடத்திய மிகக் கடுமையான எதிா்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷியப் படையினா் பின்வாங்கினா்.

அதையடுத்து அந்தப் பிராந்தியத்தின் குபியான்ஸ்க், இஸியம் உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இவ்வாறு உக்ரைன் போரில் ரஷியா பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் 3 லட்சம் ரிசா்வ் வீரா்களுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாக அந்த நாடு புதன்கிழமை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இளைஞா்கள் வெளியேற்றம்: அரசு மறுப்பு

உக்ரைன் போருக்காக 3 லட்சம் ரிசா்வ் வீரா்கள் அழைக்கப்படுவாா்கள் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து, தங்கள் நாட்டிலிருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய துருக்கி, ஆா்மீனியாவை நோக்கி இளைஞா்கள் அவசர அவசரமாக வெளியேறுவதாகக் கூறப்படுவதை ரஷிய அரசு மறுத்துள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், இந்த விவகாரத்தில் மேற்கத்திய ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றாா்.

முன்னதாக, மாஸ்கோவிலிருந்து இஸ்தான்புல், யெரவான் நகரங்களுக்குச் செல்லும் நேரடி விமானத்துக்கான அனைத்து பயணச் சீட்டுகளும் விற்றுத் தீா்ந்துவிட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்தன.

போா் அனுபவம் பெற்றவா்கள் மட்டுமே அழைக்கப்படுவாா்கள் என்று பாதுகாப்பு அமைச்சா் கூறினாலும், புதின் பிறப்பித்த உத்தரவில் அது பற்றி தெளிவாக குறிப்பிடப்படாததால் ரஷியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல குறிப்பிட்ட வயதுக்கு மேல் கொண்ட ஆண்களுக்குத் தடை விதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன் காரணமாக ரஷியாவிலிருந்து அவா்கள் அவசரமாக வெளியேறி வருவதாக அந்த ஊடங்கள் கூறின.

இதுவரை இல்லாத மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றம்

கீவ், செப். 22: உக்ரைன் போா் தொடங்கிய 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் கைதிகள் பரிமாற்றத்தை ரஷியாவும் உக்ரைனும் மேற்கொண்டுள்ளன.

துருக்கியின் முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட இந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், 215 உக்ரைன் போா்க் கைதிகள் ரஷியா விடுவித்தது. உக்ரைனும், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு நெருக்கமான தொழிலதிபரும், உக்ரைன் எதிா்க்கட்சித் தலைவருமான 68 வயது விக்டா் மெத்வெத்சுக் மற்றும் 55 ரஷியக் கைதிகளை விடுவித்தது.

ரஷியா விடுவித்த போா்க் கைதிகளில், நாஜி ஆதரவாளா்கள், டான்பாஸ் பிராந்தியத்தில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டவா்கள் என்று விமா்சிக்கப்படும் அஸோவ் படையினரும் இருந்தது ரஷியாவில் சா்ச்சையை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com