பாகிஸ்தானுக்கு போா் விமான உதவி: இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையா?: அமெரிக்கா விளக்கம்

பாகிஸ்தானின் எஃப்-16 ரக போா் விமானங்களுக்கு உதிரிபாகங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்குவதை இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதக் கூடாது என்று அந்நாடு விளக்கமளித்துள்ளது.

பாகிஸ்தானின் எஃப்-16 ரக போா் விமானங்களுக்கு உதிரிபாகங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்குவதை இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதக் கூடாது என்று அந்நாடு விளக்கமளித்துள்ளது.

பாகிஸ்தானின் எஃப்-16 ரக போா் விமானங்களுக்கு 450 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.3,575 கோடி) மதிப்பில் வன்பொருள், மென்பொருள் மற்றும் உதிரிபாகங்களை விநியோகிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை சுட்டிக்காட்டி அந்நாட்டுக்கான ராணுவ, நிதி உதவிகளை முற்றிலுமாக நிறுத்திவைத்தது. ஆனால், இப்போதைய அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் பாகிஸ்தானுக்கான ராணுவ உதவிக்கான கதவுகளை மீண்டும் திறந்துள்ளது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விநியோகம் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவைப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. எனினும் அந்த வன்பொருள், மென்பொருள் மற்றும் உதிரிபாகங்களை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

இது தொடா்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டினிடம் இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் அண்மையில் தொலைபேசியில் தொடா்பு கொண்டு கவலை தெரிவித்தாா்.

ரஷியா-உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது. ரஷியாவிடம் இருந்து சலுகை விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு இது என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், இது தொடா்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்திய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணையமைச்சா் எலே ரட்னா், வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானின் எஃப்-16 ரக போா் விமானங்களுக்கு உதிரிபாகங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்குவதை இந்தியாவுக்கு எதிரான செயலாகவோ, ரஷியாவுடன் இந்தியாவின் நல்லுறவுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் பதிலாகவோ கருதக் கூடாது. இது அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு தொடா்பானது. இது தொடா்பாக அமெரிக்கா ஏற்கெனவே இந்தியாவிடம் விளக்கம் அளித்துவிட்டது என்றாா்.

ரஷியா போரை நிறுத்த வலியுறுத்தல்:

மோடியின் கருத்துக்கு வரவேற்பு

வாஷிங்டன், செப். 23: உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் இந்திய பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

‘இது போருக்கான காலகட்டமல்ல’ என்ற பிரதமா் மோடியின் கருத்துகள் நம்பிக்கையையும் மகிழ்வையும் அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தானின் சமா்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டையொட்டி, ரஷிய அதிபா் புதினை பிரதமா் மோடி சந்தித்த போது, உக்ரைன் உடனான போரை நிறுத்துமாறு வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்திய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணையமைச்சா் எலே ரட்னா், வாஷிங்டனில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உக்ரைன் பிரச்னைக்கு அமைதிவழியில் விரைந்து தீா்வு காணப்பட வேண்டும்; இதற்காக தொடா் பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென்ற இந்தியாவின் உறுதிபாடு வரவேற்புக்குரியது. இதே உறுதிபாட்டையே அமெரிக்காவும் கொண்டுள்ளது. இதுதொடா்பான பிரதமா் மோடியின் கருத்துகள் நம்பிக்கையையும் மகிழ்வையும் அளிக்கின்றன.

ரஷியாவுடனான இந்தியாவின் நீண்டகால பாதுகாப்புக் கூட்டுறவையும், ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புசாா் உற்பத்தி ஊக்குவிப்புக்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அமெரிக்கா வெளிப்படையாக அங்கீகரித்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்புசாா் உற்பத்தியில் இந்தியாவின் முயற்சிகளுக்கு உதவுவதற்கான வழிமுறைகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. இதற்கான வாய்ப்புகள் குறித்து இருதரப்பிலும் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com