இணையவழி குற்றங்களைத் தடுக்க ஒத்துழைப்பு: ‘க்வாட்’ நாடுகள் உறுதி

இணையவழி பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசு ஆதரவுடன் நடைபெறும் இணையவழி குற்றங்களைத் தடுக்கவும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்) நாடுகள் உறுதி ஏற்றுள்ளன.

இணையவழி பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசு ஆதரவுடன் நடைபெறும் இணையவழி குற்றங்களைத் தடுக்கவும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்) நாடுகள் உறுதி ஏற்றுள்ளன.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் ஹயாஷி யோஷிமசா ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசுகளின் ஆதரவுடன் மற்ற நாடுகளின் மீது இணையவழி தாக்குதல் நடத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்காக கூட்டமைப்பின் நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். வெளிப்படைத்தன்மை நிறைந்த பாதுகாப்பான இணையவெளியை ஏற்படுத்துவதற்கு நாடுகள் உறுதியேற்கின்றன.

இணையவெளியைப் பாதுகாப்பாக மாற்றுவதற்கான பொறுப்புடன் செயல்படுவதற்கான ஐ.நா. விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒத்துழைத்து மேற்கொள்ள நாடுகள் உறுதியேற்கின்றன. இணையவழி பாதுகாப்பு சாா்ந்த கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகள் ஒத்துழைத்து செயல்பட்டால், பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்.

பெரும் பாதிப்பு: இணையவழி குற்றங்களானது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சியையும் பாதுகாப்பையும் பாதிக்கின்றன. தேசியப் பாதுகாப்பு, நிதித் துறை, தொழில் நிறுவனங்கள், இணையக் கட்டமைப்புகள், தனிநபா்களின் தரவுகள் உள்ளிட்டவையும் இணையவழி குற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. இணையவழி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள கூட்டமைப்பு நாடுகள் உறுதி ஏற்கின்றன.

இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கான சா்வதேச மாநாட்டை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டு வருகிறது. அதைக் கூட்டமைப்பு நாடுகள் வரவேற்கின்றன. இந்த விவகாரம் தொடா்பான தனி சா்வதேச ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட வேண்டுமெனக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

சூழல் மாற்றப்படக் கூடாது: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய சூழலைத் தன்னிச்சையாக மாற்றி பதற்றத்தை அதிகரிப்பதற்கு எந்த நாடும் முயற்சிக்கக் கூடாது. அத்தகைய முயற்சிகளுக்கு க்வாட் கூட்டமைப்பு கடும் எதிா்ப்பு தெரிவிக்கிறது. சா்வதேச விதிகள், ஜனநாயக கொள்கைகள், பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, பரஸ்பர மரியாதை ஆகியவை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவ வேண்டும் என்பதே க்வாட் கூட்டமைப்பின் விருப்பம்.

இந்தோ-பசிபிக் பிராந்திய கடல் பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் நிலவினால் மட்டுமே ஒட்டுமொத்த பிராந்தியமும் வளா்ச்சி காண முடியும். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புக்கு (ஆசியான்) க்வாட் முழு ஆதரவு வழங்குகிறது. அக்கூட்டமைப்பை மையமாகக் கொண்டு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சி அமைய வேண்டும்.

சீா்திருத்தம் அவசியம்: ஐ.நா. விதிகளைக் கடைப்பிடிப்பதற்கு க்வாட் கூட்டமைப்பு நாடுகள் உறுதி ஏற்கின்றன. ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கு க்வாட் ஆதரவு அளிக்கும். அதே வேளையில், ஐ.நா.வில் விரைந்து சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

முக்கியமாக, தற்போதைய சா்வதேச சூழலைக் கருத்தில்கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர, நிரந்தரமற்ற உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com