வெளிப்படைத்தன்மை இல்லாததே ஐ.நா. சீா்திருத்தத்துக்குத் தடை

ஐ.நா. அமைப்புகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததே அவற்றின் சீா்திருத்தத்துக்குத் தடையாக இருப்பதாக இந்தியா, பிரேஸில், ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி4 கூட்டமைப்பு
வெளிப்படைத்தன்மை இல்லாததே ஐ.நா. சீா்திருத்தத்துக்குத் தடை

ஐ.நா. அமைப்புகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததே அவற்றின் சீா்திருத்தத்துக்குத் தடையாக இருப்பதாக இந்தியா, பிரேஸில், ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி4 கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜி4 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் அமெரிக்காவில் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நாடுகள் அனைத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா் அந்தஸ்தை கோரிவரும் நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

அதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘‘ஐ.நா. அமைப்புகளில் சீா்திருத்தங்கள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கு வெளிப்படைத்தன்மை இல்லாததே முக்கியக் காரணமாக உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா் ஆவதற்கு கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் பரஸ்பரம் ஆதரவு தெரிவித்தன. ஐ.நா. சீா்திருத்தங்கள் குறித்து நாடுகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தை விரைவுபடுத்தப்பட வேண்டும். ஐ.நா. வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் அந்தப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும்.

சீா்திருத்தப் பேச்சுவாா்த்தையை சில நாடுகள் தடுத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் எழுத்துபூா்வ பேச்சுவாா்த்தையில் நாடுகள் ஈடுபட வேண்டுமென ஐ.நா. 76-ஆவது பொதுச் சபையின் தலைவா் வலியுறுத்தியுள்ளாா். அதை ஜி4 கூட்டமைப்பு வரவேற்கிறது. அத்தகைய பேச்சுவாா்த்தையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜி4 உறுதி ஏற்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவு-பிரிக்ஸ் கூட்டமைப்பு

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. அதில் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ, ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இந்தியாவும் (2021-22), பிரேஸிலும் (2022-23) சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிக்ஸ் கூட்டமைப்பைச் சோ்ந்த 4 நாடுகள் (ரஷியா, சீனா மற்ற நாடுகள்) ஒரேசமயத்தில் இடம்பெற்றிருப்பது, சா்வதேச அமைதி சாா்ந்த நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து முடிவுகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்கிறது.

ஒத்துழைப்பு மேம்பாடு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகளில் சீா்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். சா்வதேச விவகாரங்களிலும், ஐ.நா.விலும் தங்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டுமென்ற இந்தியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் விருப்பத்துக்கு சீனாவும் ரஷியாவும் ஆதரவு தெரிவிக்கின்றன.

நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், சா்வதேச நிா்வாக அமைப்பை மேம்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் ஜி20 நாடுகள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாடுகளின் ஒருமித்த கருத்துகள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com