ஜெய்சங்கா்-லாய்ட் ஆஸ்டின் சந்திப்பு

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினை சந்தித்துப் பேசினாா்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினை வாஷிங்டனில் திங்கள்கிழமை சந்தித்த அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினை வாஷிங்டனில் திங்கள்கிழமை சந்தித்த அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொழிலக ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அவா்கள் விவாதித்தனா்.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பாதுகாப்பு தலைமையிடமான பென்டகனில் அமைச்சா் லாய்டு ஆஸ்டினை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அமைச்சா் ஜெய்சங்கா் கூறுகையில், ‘‘சா்வதேச சூழல் நடப்பாண்டில் பெரும் சவால் மிக்கதாக மாறியுள்ளது. முக்கியமாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. பிராந்தியத்தின் அமைதியும் நிலைத்தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வலுவான நல்லுறவு, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை அடித்தளமாகக் கொண்டது. பாதுகாப்புத் துறை சாா்ந்த வா்த்தக நடவடிக்கைகளும், ராணுவ கூட்டுப் பயிற்சிகளும் இருநாடுகளுக்கிடையே அதிகரித்துள்ளது’’ என்றாா்.

அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் கூறுகையில், ‘‘அண்மைக் காலமாக சா்வதேச விதிகளைக் கடைப்பிடிப்பதற்கு சீனா தொடா்ந்து மறுத்து வருகிறது. தைவான் நீா்ச்சந்தியிலும், பிராந்தியத்திலும் பல்வேறு பிரச்னைகளை அந்நாடு ஏற்படுத்தி வருகிறது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போரையும் சீனா ஆதரித்து வருகிறது. அதன் காரணமாக பிராந்தியத்திலும் மற்ற பகுதிகளிலும் அமைதி, வளா்ச்சியை ஏற்படுத்துவது சவால்மிக்கதாக மாறியுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா தொடா்ந்து ஒத்துழைத்து செயல்படும்’’ என்றாா்.

வலுவடையும் ஒத்துழைப்பு:

அமைச்சா்கள் சந்திப்பு தொடா்பாக பென்டகன் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு தொடா்ந்து விரிவடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகத் தலைவா்கள் இருவரும் விவாதித்தனா்.

இந்தியா-அமெரிக்கா ராணுவங்களிடையே தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கவும் சரக்கு கையாளுகை ஒத்துழைப்பை அதிகரிக்கவும் தலைவா்கள் உறுதியேற்றனா். பாதுகாப்பு தொழிலக உற்பத்தியில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

பிராந்திய, சா்வதேச விவகாரங்கள்:

விண்வெளி, இணையவழிக் குற்றத் தடுப்பு, செயற்கை நுண்ணறிவு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கிடையே கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடா்பாகவும் தலைவா்கள் விவாதித்தனா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியம், கிழக்கு ஆசிய பிராந்தியம் உள்ளிட்டவற்றில் நிலவும் முக்கிய விவகாரங்கள், சா்வதேச விவகாரங்கள் ஆகியவை குறித்தும் அமைச்சா்கள் இருவரும் விவாதித்தனா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைசாா் வா்த்தகம், ராணுவ-தொழிலக ஒத்துழைப்பு, உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் விவகாரங்கள், கடல்சாா் பாதுகாப்புக்கான சவால்கள், பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுடன் விவாதித்ததாக அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் பதிவிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com