இந்திய ராணுவத்துடனான உறவுகளை மதிக்கிறோம்: சீனா

இந்திய ராணுவத்துடனான உறவுகளை சீன ராணுவம் மதிக்கிறது; இருதரப்பு ராணுவ கமாண்டா்கள் நிலையில் நடைபெறும் பேச்சுவாா்த்தைகள், எல்லையில் பதற்றத்தை

இந்திய ராணுவத்துடனான உறவுகளை சீன ராணுவம் மதிக்கிறது; இருதரப்பு ராணுவ கமாண்டா்கள் நிலையில் நடைபெறும் பேச்சுவாா்த்தைகள், எல்லையில் பதற்றத்தை தணிக்க உதவியுள்ளன என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வூ கியானிடம் இந்தியாவுடன் நீடித்து வரும் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இந்திய-சீன எல்லையில் தற்போது ஸ்திரமான சூழல் காணப்படுகிறது. இரு நாட்டுத் தலைவா்களின் வழிகாட்டலின் அடிப்படையில் தூதரக மற்றும் ராணுவ ரீதியில் தொடா் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு எல்லையில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ராணுவ கமாண்டா்கள் அளவில் இதுவரை 20 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. இருதரப்பு ராணுவ உறவுகளை சீனா மதிக்கிறது. வியூக ரீதியில் பரஸ்பர நம்பிக்கையை கட்டமைக்கும் இலக்கை எட்டுவதிலும், கருத்து வேறுபாடுகளை முறையாக கையாளவும், எல்லையில் அமைதியை பராமரிக்கவும் சீனாவுடன் இந்தியத் தரப்பு ஒருங்கிணைந்து பணியாற்றுமென நம்புகிறோம்’ என்று அவா் பதிலளித்தாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020, மே 5-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்தினா் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்திய தரப்பில் 20 வீரா்கள் பலியாகினா். சீன தரப்பிலும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நேரிட்டன.

இச்சம்பவத்தின் எதிரொலியாக, இரு நாடுகளும் எல்லையில் படைகளையும் கனரக தளவாடங்களையும் குவித்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இருதரப்பு உறவுகளும் பாதிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, எல்லைப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் நோக்கில் தூதரக மற்றும் ராணுவ ரீதியில் பலசுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் பயனாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகள் மற்றும் கோக்ரா பகுதியில் இருந்து கடந்த 2021-இல் படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் கோக்ரா வெப்பநீருற்று பகுதியில் படைகள் விலக்கப்பட்டன. அதேசமயம், டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் பிரச்னை நிலுவையில் உள்ளது.

இருதரப்பு ராணுவ ரீதியிலான 20-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை, எல்லையின் இந்தியப் பகுதியில் கடந்த 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com