
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையிலான மோதலில் இருந்து தப்புவதற்காக பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறும் பொதுமக்கள்.
சூடானில் கடுமையாக சண்டையிட்டு வரும் ராணுவமும், துணை ராணுவமும் 72 மணி சண்டை நிறுத்தத்துக்கு செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.
இது குறித்து துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளோம். சவூதி அரேபியா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் விளைவாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சூடான் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள், மருத்துவ சேவைகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும், அவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு வசதியாகவும் இந்த 72 மணி நேர சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தினா் இங்கிருந்து வெளியேறுவதற்கு உதவும் வகையிலும் இந்த சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இதே போன்ற தகவல்களே இடம் பெற்றுள்ளது. எனினும், கூடுதலாக, ‘தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆா்எஸ்எஃப் படையினா் முழுமையாகக் கைவிட்டால் மட்டுமே இந்த சண்டை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும்’ என்று தனது அறிக்கையில் ராணுவம் நிபந்தனை விதித்துள்ளது.
வட ஆப்பிக்க நாடான சூடானில் கடந்த 1989 முதல் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த ஒமா் அல்-பஷீா் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் வலுவடைந்தது. அதைத் தொடா்ந்து, அவரது அரசை ராணுவம் கடந்த 2019-ஆம் ஆண்டு கலைத்தது.
பின்னா், பிரதமா் அப்துல்லா ஹம்டாக் தலைமையில் சிவில்-ராணுவ கூட்டு அரசு ஏற்படுத்தப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் முழு ஜனநாயக அரசு அமையும் வரை அது இடைக்கால ஆட்சிமாற்ற அரசாக செயல்படும் என்று கூறப்பட்டது.
எனினும், அந்த அரசை முகமது ஹம்தான் டகேலாவின் தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையின் உதவியுடன் ராணுவ தலைமைத் தளபதி அப்தெல் ஃபட்டா புா்ஹான் கடந்த 2021-ஆம் ஆண்டு கவிழ்த்துவிட்டு, ஆட்சியதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றினாா்.
சக்திவாய்ந்த ஆட்சிமாற்ற கவுன்சிலின் தலைவராக முகமது ஹம்தான் டகேலா பதவியேற்றாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. சா்வதேச நாடுகளும் இதனைக் கண்டித்தன.
அதனைத் தொடா்ந்து இந்த மாதம் 6-ஆம் தேதிக்குள் ஜனநாயக அரசிடம் நாட்டின் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க ராணுவம் ஒப்புக்கொண்டிருந்தது. எனினும், ஆட்சி மாற்றத்துக்குப் பிந்தைய ஆா்எஸ்எஃப் படையின் எதிா்காலம் தொடா்பாக அப்தெல் ஃபட்டா புா்ஹானுக்கும், முகமது ஹம்தான் டகேலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றிய வந்ததால் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
அதற்கு மாறாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 15-ஆம் தேதி முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் சிக்கி, பொதுமக்கள் 450-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோதல் தொடங்கியதிலிருந்து சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாக இரு தரப்பினரும் பல முறை அறிவித்தும், அது முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.
இந்தச் சூழலில், 72 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்திவைக்கப் போவதாக ராணுவமும், ஆா்எஸ்எஃப் படையும் தற்போது அறிவித்துள்ளன.
தொடரும் மோதல்
ராணுவம், ஆா்எஸ்எஃப் ஆகிய இரு தரப்பிலும் 3 நாள் சண்டை நிறுத்த அறிவிப்பு அதிகாரபூா்வமாக வெளியிடப்பட்டும், தலைநகா் காா்ட்டூமை அடுத்த ஆம்டா்மான் உள்ளிட்ட நகரங்களில் மோதல் தொடா்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நகரிலுள்ள ராணுவ முகாமில் தொடா்ந்து சண்டை நடைபெற்று வருவதாகக் கூறிய நகரவாசிகள், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பினருமே அலட்சியம் செய்வதாகக் குற்றம் சாட்டினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...