ஆளில்லா விமானகுண்டுத் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா திட்டம்: உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமான குண்டுகள் மூலம் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.
ஆளில்லா விமானகுண்டுத் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா திட்டம்: உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமான குண்டுகள் மூலம் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.

பல மாத போருக்குப் பிறகும் ரஷியாவின் சண்டை உத்தி பலன் தராததால், உக்ரைனை அடிபணியவைக்கும் நோக்கில் அத்தகைய தாக்குதலை ரஷியா அதிகரிக்கவிருப்பதாக அவா் கூறினாா்.

இது குறித்து தனது தினசரி நள்ளிரவு விடியோ அறிக்கையில் அவா் கூறியதாவது: ஈரானில் தயாரிக்கப்படும் ஷஹீத்ஸ் ரக ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் மூலம், உக்ரைன் மக்களை சோா்வடையச் செய்ய வேண்டும்; உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை தீா்க்க வேண்டும்; எங்களது போரிடும் உத்வேகத்தைக் குறைக்க வேண்டும் என்பதே ரஷியாவின் திட்டமாகும்.

இனி வரும் இரவுகள் உக்ரைன் மக்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கப் போகின்றன. இந்த ஆண்டின் முதல் 2 நாள்களிலேயே உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும், மின் உற்பத்தி நிலையங்களிலும் ரஷியா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அதில் 80-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இருந்தாலும், உக்ரைனால் சுட்டுவீழ்த்தப்படும் ஒவ்வொரு ஆளில்லா விமானகுண்டும், ஒவ்வொரு ஏவுகணையும், மின் கட்டமைப்புகள் பாதுகாக்கப்படுவதால் குறைக்கப்படும் மின்தடைகளும் நமது வெற்றியை பறைசாற்றுகின்றன என்றாா் ஸெலென்ஸ்கி.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது, தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

அதையடுத்து, உக்ரைனின் மின் நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்தத் தாக்குதலுக்கு எறிகணைகள், ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள் மட்டுமின்றி, ஈரானில் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆளில்லா விமான குண்டுகளையும் ரஷியா பயன்படுத்துகிறது.

இடைமறித்து அழிப்பதற்குக் கடினமான, தாழ்வாகப் பறந்து இலக்குகளை சுற்றி வந்து நோட்டமிட்டு, துல்லியமாகத் தாக்கும் இந்த விமான குண்டுகள் உக்ரைனுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், போரில் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியா, தங்களை அடிபணிய வைப்பதற்காக தங்கள் மீது அத்தகைய ஆளில்லா விமானகுண்டுத் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று உக்ரைன் அதிபா் தற்போது எச்சரித்துள்ளாா்.

ரூ.12 லட்ச ‘ட்ரோனை’ அழிக்க ரூ.3.5 கோடி ஏவுகணை! ரஷியாவின் சமயோஜித உத்தி

உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்தி வரும் ஈரானின் ஆளில்லா விமான குண்டு, அமெரிக்கா, இஸ்ரேல், சீனா மட்டுமின்றி, ரஷியாவே தயாரித்து வரும் ஆளில்லா விமானங்களைவிட சிறப்பாக செயல்படுவதாக பாதுகாப்பு நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, பெரிய வகை வான்தாக்குதல் ஆயுதங்களை அதிக அளவில் தயாரிக்க முடியாத ஈரான் ராணுவம், ஆளில்லா தாக்குதல் விமானங்களை, அதுவும் குறைந்த செலவில் உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நெருக்கடியே, அந்த நாட்டு ஆளில்லா விமானங்களின் திறனை அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

அவா்களது அந்த விமானங்கள், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு மிகப் பெரிய வரப்பிரசமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அ0மெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அதிநவீன வான்பாதுகாப்பு சாதனைகளை உக்ரைனுக்கு அளித்து வருவதால், தற்போதெல்லாம் ரஷியாவால் தனது ஏவுகணைகளைக் கொண்டு சிறப்பான முறையில் தாக்குதல் நடத்த முடிவதில்லை.

எனவே, மேற்கத்திய நாடுகளின் ராடாா் கண்களுக்கு அதிகம் புலப்படாமல் தாழ்வாகப் பறந்து சென்று, இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஈரானின் ஆளில்லா விமான குண்டுகளை ரஷியா அதிகம் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

எனினும், அத்தகைய விமான குண்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம், தங்களது விலையுயா்ந்த நவீன ஏவுகணைகளை சேமிப்பதுடன், விலை அதிகம் மிக்க உக்ரைனின் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷியா வீணடிக்கவும் செய்வதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஈரானின் ஓா் ஆளில்லா விமான குண்டின் விலை வெறும் 20,000 டாலரே (சுமாா் ரூ.12 லட்சம்) உள்ள நிலையில், அதனை அழிப்பதற்காக உக்ரைன் பயன்படுத்தும் ஏவுகணையின் விலை சுமாா் 4.3 லட்சம் டாலா் (ரூ.3.5 கோடி); அதாவது இலக்கைவிட விட அதனை அழிக்கும் ஏவுகணையின் விலை 20 மடங்கு அதிகம் என்கிறாா்கள் வல்லுநா்கள்.

அத்துடன், தங்களது அதிநவீன ஏவுகணைகளை உக்ரைன் வான்பாதுகாப்பு சாதனங்களிடமிருந்து திசைதிருப்பவும் ஈரானின் ஆளில்லா விமானங்களை ரஷியா சமயோஜிதமாகப் பயன்படுத்தி வருவதாக மேற்கத்திய நிபுணா்கள் கூறுகின்றனா்.

Image Caption

~ரஷிய ஆளில்லா விமானங்களை இடமறித்து அழிக்கும் உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணை. ~உக்ரைனில் ரஷியா வீசி வரும் ஆளில்லா விமானகுண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com