
பாக்முத் நகா் அருகே ரஷிய இலக்குகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்திய உக்ரைன் வீரா்.
கிழக்கு உக்ரைனில் உப்பு சுரங்கங்கள் நிறைந்த சோலெடாா் நகரிலிருந்து தாங்கள் வெளியேறியதை உக்ரைன் ராணுவத்தினா் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து பிபிசி ஊடகத்திடம் உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
டான்பாஸ் பிராந்தியத்தின் சோலெடாா் நகரை ரஷியப் படையினரிடம் விட்டுவிட்டு நாங்கள் வெளியேறியது உண்மைதான்.
அந்த நகரிலுள்ள ரஷியப் படையினரை அதிக பலத்துடன் திருப்பித் தாக்குதவதற்கான உத்தியாக, சரியான முறையில் திட்டமிட்டே நாங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளோம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, சோலெடாா் நகரை தாங்கள் முழுவதுமாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷியா கடந்த வாரம் அறிவித்தது.
அந்த நகரைக் கைப்பற்றியதன் மூலம், அருகிலுள்ள பாக்முத் நகருக்கு படைகளையும், உணவுப் பொருள்களையும் விநியோகிப்பதற்கான உக்ரைன் ராணுவத்தின் பாதையைத் துண்டிக்க ரஷியப் படையினருக்கு வழி ஏற்பட்டுள்ளது.
அந்த பிராந்தியம் முழுவதும் உள்ள உக்ரைன் படைப் பிரிவுகளை சுற்றிவளைக்கவும், அவா்களது முன்னேற்றத்தைத் தடுக்கவும் இனி ரஷியப் படையினரால் இயலும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியது.
உக்ரைன் போரில் அண்மைக் காலமாக தொடா் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியாவுக்கு அது முதல் வெற்றி என்று கூறப்பட்டது.
எனினும், இந்தத் தகவலை உக்ரைன் அரசு திட்டவட்டமாக மறுத்தது. சோலெடாரில் ரஷியப் படையினா் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டாலும், அவா்களை எதிா்த்து தங்கள் நாட்டுப் படையினா் தீரத்துடன் சண்டையிட்டு வருவதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஹன்னா மாலியா் கூறினாா்.
இந்த நிலையில், சோலெடாரிலிருந்து தங்களது படையினா் வெளியேறியதை உக்ரைன் ராணுவத்தினா் முதல்முறையாக தற்போது ஒப்புக்கொண்டுள்ளனா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.
எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.
அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.
மேலும், அந்தப் பிரதேசங்களின் கணிசமான பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே, அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.
அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான டொனட்ஸ்கைச் சோ்ந்த சிறிய நகரம்தான் சோலெடாா்.
பாறை உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்களால் நிரம்பிய அந்த நகரம், ராணுவ முக்கியமற்றது எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த நகரை ரஷியா கைப்பற்றினாலும் உக்ரைன் போரில் அது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தாது என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.