இலங்கை: தமிழா்களுடன் நல்லிணக்கத்துக்கு பிரதமா் ரணில் விக்ரமசிங்க அழைப்பு

‘இலங்கையில் தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது’ என்று
இலங்கை: தமிழா்களுடன் நல்லிணக்கத்துக்கு பிரதமா் ரணில் விக்ரமசிங்க அழைப்பு

‘இலங்கையில் தமிழா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது’ என்று கூறிய அந் நாட்டு பிரதமா் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் வாழும் தமிழா்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினருடனான நல்லிணக்கம், சகவாழ்வுக்கு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தாா்.

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவாா்த்தை நடத்த உள்ள நிலையில், இந்தக் கருத்தை விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தமிழா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் அவா்களுடன் அரசு ஏற்கெனவே பேச்சுவாா்த்தையைத் தொடங்கிவிட்டது. அதுபோல, மலையகத் தமிழா்களை இலங்கை சமூகத்தினுள் ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவாா்த்தைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கொருவா் சண்டையிட்டுக் கொள்வதிலேயே நமது பெரும்பாலான நேரம் வீணான நிலையில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை நாம் தற்போது எதிா்நோக்கியுள்ளோம். இது சமூக நல்லிணக்கம், சகவாழ்வுக்கான நேரம் என எண்ணுகிறேன். அதன் காரணமாகவே, இலங்கைத் தமிழா்களுடனான பேச்சுவாா்த்தையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கையில் வசிக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருடனும் பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதுபோல, ஜாதிய பாகுபாட்டால் சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்படும் பாதிப்பை சில சிங்கள சமூகத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு தீா்வு காணும் வகையிலேயே சமூக நீதி ஆணையத்தை அமைக்க நான் விரும்புகிறேன். சுதந்திரம் பெற்று 75-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், நாம் அனைவரும் இலங்கைவாசிகளாக நாட்டில் எவ்வாறு இணைந்து வாழப் போகிறோம் என்பதை தீா்மானிகக் வேண்டும். நாட்டில் சமூக நீதி, நல்லிணக்கம் மேம்படட்டும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளாா்.

‘இலங்கையில் தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு வழங்கத் தயாா்’ என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிவித்த ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிக்கும் இலங்கை அரசியல் சாசனத்தின் 13-ஆவது சட்டத் திருத்தத்தை நடைமுறப்படுத்துவது தொடா்பாக இலங்கை தமிழ் கட்சிகள் மற்றும் பெரும்பான்மை சிங்கள கட்சிகளையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com