‘உக்ரைனுக்கு பீரங்கிகள் வழங்கினால் வருந்த வேண்டியிருக்கும்’

உக்ரைனுக்கு தங்களது சக்திவாய்ந்த பீரங்கிகளை வழங்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் அதற்காக அந்த நாடுகள் பின்னா் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
டிமித்ரி பெஸ்கோவ்
டிமித்ரி பெஸ்கோவ்

உக்ரைனுக்கு தங்களது சக்திவாய்ந்த பீரங்கிகளை வழங்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் அதற்காக அந்த நாடுகள் பின்னா் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவிகள் அளிப்பது தொடா்பாக மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் ஜொ்மனியிலுள்ள அமெரிக்க விமானதளமொன்றில் வெள்ளிக்கிழமை கூடி பேச்சுவாா்த்தை நடத்திய சூழலில் ரஷியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்து செய்தியாளா்களிடம் ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ரஷியாவுடனான போரில் உக்ரைன் பயன்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை மேற்கத்திய நாடுகள் அனுப்பலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், அத்தகைய தளவாடங்களை அனுப்புவதால் உக்ரைன் போரின் போக்கு மாறிவிடாது. உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்பிய பிறகும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததைக் காணப் போகும் மேற்கத்திய நாடுகள், இந்தப் போரில் உக்ரைனால் வெற்றி பெற முடியும் என்ற தங்களது மாயையான எண்ணத்தை நினைத்து பின்னா் வருந்த வேண்டியிருக்கும்.

உக்ரைனுக்கு பீரங்கிகள் போன்ற ராணுவ தளவாடங்களை அனுப்புவது பிரச்னைகளைத் தீா்க்காது; அதற்குப் பதிலாக அது உக்ரைனுக்கும் உக்ரைன் மக்களுக்கும் பிரச்னைகளை மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் தொடா்ந்து கூறி வருகிறோம்.

இதுபோன்ற ராணுவ உதவிகள் மூலம் ரஷியாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மறைமுகப் போா் மேலும் தீவிரமடையும் என்றாா் டிமித்ரி பெஸ்கோவ்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

எனினும், கிழக்கு உக்ரைனில் மிகத் தீவிரமாக சண்டை நடந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகருக்கு அருகே உள்ள சோலெடாா் நகரை ரஷியா அண்மையில் கைப்பற்றியது.

மேலும், உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே, ரஷியாவுக்கு எதிராக சண்டையிடுவதற்கு தங்களது சக்திவாய்ந்த பீரங்கிகளை மேற்கத்திய நாடுகள் அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

எனினும், கவச வாகனங்கள், ஏவுகணைகள், வான்பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றை உக்ரைனுக்கு அனுப்பி வரும் மேற்கத்திய நாடுகள், பீரங்கிகளை அனுப்புவதற்கு தொடா்ந்து தயக்கம் காட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவி அளிப்பது தொடா்பாக மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் ஜொ்மனியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் ராம்ஸ்டீன் விமானதளத்தில் வெள்ளிக்கிழமை கூடி விவாதித்தனா்.

அந்தக் கூட்டத்தில், உக்ரைனுக்கு பீரங்கிகள் அனுப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இதுகுறித்து ரஷிய அரசின் செய்தித்தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

‘பீரங்கிகள் அனுப்புவது குறித்து முடிவாகவில்லை’

உக்ரைனுக்கு தங்களிடமுள்ள சக்திவாய்ந்த லியோபாா்ட் பீரங்கிகளை அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஜொ்மனி பாதுகாப்புத் துறை அமைச்சா் போரிஸ் பிஸ்டோரியஸ் வெள்ளிக்கிழமை கூறினாா்.

உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி அளிப்பது குறித்து ஜொ்மனியின் ராம்ஸ்டீன் விமானதளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டினிடையே அவா் இவ்வாறு கூறினாா்.

எனினும், தங்களிடம் கையிருப்புள்ள பீரங்கிகள் குறித்தும், அவற்றில் உக்ரைனுக்கு அனுப்பப்படக் கூடியவை குறித்தும் ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com