ராவல்பிண்டி கண்டோன்மென்ட் பகுதியில் இந்து, கிறிஸ்து குடும்பங்களின் வீடுகள் இடிப்பு!

Authorities in Pakistan's Rawalpindi have demolished houses of a minority community, a Hindu and a Christian family, who were living in the area for the past 70 years.
ராவல்பிண்டி கண்டோன்மென்ட் பகுதியில் இந்து, கிறிஸ்து குடும்பங்களின் வீடுகள் இடிப்பு!

ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வந்த சிறுபான்மை சமூகத்தினர், இந்து மற்றும் கிறிஸ்துவ குடும்பங்களின் வீடுகளை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளதால் தங்குமிடம் இல்லாமல் வாழ வேண்டிய கட்டாய நிலைய ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 27 ஆம் தேதி ராவல்பிண்டியின் கண்டோன்மென்ட் பகுதியில் இந்து குடும்பம், கிறிஸ்தவ குடும்பம் மற்றும் ஷியாக்களுக்கு சொந்தமான குறைந்தது ஐந்து வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்களது உடமைகள் அக்கம் பக்கத்தில் உள்ள தெருக்களில் வீசப்பட்டன.

இந்து குடும்பம் அருகில் உள்ள கோவிலில் தஞ்சம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதேசமயம் கிறிஸ்துவ குடும்பமும் ஷியாக்களும் தங்குமிடம் இல்லாமல் வாழ வேண்டிய கட்டாய நிலைய ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற முயன்றனர், ஆனால், அதிகாரிகள் தங்கள் வீடுகளை இடிப்பதில் மும்பரமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட இந்து குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "அவர்கள் மாஃபியாக்கள் மற்றும் குறைந்தது 100 பேர் கொண்ட குழுவாக வந்து எங்களைத் துன்புறுத்தினார்கள், நாங்கள் அவர்களை எதிர்க்க முயன்றபோது எங்களைத் தாக்கினார்கள். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை".

மேலும், "நாங்கள் அவர்களின் நடவடிக்கைளை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல முயற்சித்தோம், ஆனால் கன்டோன்மென்ட் வாரியத்தில் ஒரே ஒரு நீதிபதி நவீத் அக்தர் மட்டுமே இருக்கிறார், அவர் அவர்களுக்கே ஆதரவாகவே செயல்படுகிறார். நாங்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பதால் எல்லா ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. ஆனால், அவர்கள் எங்களுக்கு எந்த அறிவிப்பு மற்றும் எங்கள் வீட்டு பொருள்களை எடுத்துச் செல்வதற்குக் கூட நேரம் அளிக்காமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களது குடும்பத்தை கோவிலுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் கடந்த பல தசாப்தங்களாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். நாட்டில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை அதிகாரிகள், காவல்துறை மற்றும் நீதித்துறையினர் கூட வாய்மூடி வேடிக்கை பார்ப்பவராக உள்ளனர் என்று கூறினார்.

பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது புதிதல்ல. பாகிஸ்தானில் சிறுபான்மையினரை துன்புறுத்துவது, குறிப்பாக இளம் பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்வது என எண்ணற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 

சமீபத்தில், பாக்கிஸ்தானில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் கடத்தல்கள், கட்டாயத் திருமணம் மற்றும் மதமாற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ஐ.நா எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், பாகிஸ்தானில் கட்டாயத் திருமணங்கள் மற்றும் மதமாற்றங்கள் மத அதிகாரிகளின் ஈடுபாட்டுடனும் பாதுகாப்புப் படைகள் மற்றும் நீதி அமைப்புகளுக்கு தெரிந்தே நடைபெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com