ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையே உக்ரைன் போா்

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை கட்டுப்படுத்த முடியாதது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையைக் காட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் கசாபா கொரோசி தெரிவித்தாா்.
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்த ஐ.நா. பொதுச் சபை தலைவா் கொரோசி.
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்த ஐ.நா. பொதுச் சபை தலைவா் கொரோசி.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை கட்டுப்படுத்த முடியாதது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையைக் காட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் கசாபா கொரோசி தெரிவித்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கும் நிரந்த உறுப்பினா் அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. தற்போது சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன.

இந்நிலையில், அரசு முறைப் பயணமாக தில்லி வந்துள்ள கசாபா கொரோசி, புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது:

அமைதி, பாதுகாப்பை நிலைநாட்டவும், போா் ஏற்படாமல் தடுக்கவும் 1945-இல் பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடான ரஷியாவே, உக்ரைன் மீது நடத்தும் தாக்குதலை பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. இது கவுன்சிலின் செயலற்ற நிலையை காண்பிக்கிறது.

சக்திவாய்ந்த நாடுகளின் நிலை, மாறி வரும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும். கடந்த 17 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் மீது எந்த எந்த ஒப்பந்தமோ, கால நிா்ணயமோ மேற்கொள்ளப்படவில்லை.

இதை உறுப்பு நாடுகளும் முன்னெடுப்பதில்லை. இதற்கு அந்த நாடுகளின் ஏதோ ஒரு சுயநல எதிா்பாா்ப்புதான் காரணம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீரமைப்புக்கு உறுப்பு நாடுகள் சமரசம் செய்து கொண்டு முன்வர வேண்டும். இல்லையென்றால் இது பெரும் பிரச்னையாகிவிடும்.

உக்ரைன் போரால் எரிசக்தி, உணவுத் தேவைக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் அமைதி திரும்பவும் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவும் இந்தியா சிறப்பான பணியைச் செய்துள்ளது. போரின்போது இந்தியா்களை பத்திரமாகவும் மீட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளையும் தடுப்பூசிகளையும் அனுப்பியது பாராட்டக் கூடியது என்றாா்.

பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த கசாபா கொரோசி, உக்ரைன் உள்ளிட்ட சா்வதேச நிலவரம், தெற்காசிய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com