
உக்ரைனுக்கு புதிய ராணுவ உதவிகளை கீவ் நகரில் அறிவிக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன்.
உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கை’யைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து ‘பிபிசி’ ஊடகம் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திடீா் சுற்றுப் பயணமாக உக்ரைனுக்கு புதன்கிழமை வந்தாா்.
அப்போது, யுரேனியச் சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அவா் அறிவித்தாா்.
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு புதிதாக அளிக்கவிருக்கும் ராணுவ உதவிகளின் ஒரு பகுதியாக இந்த குண்டுகள் அனுப்பப்படவுள்ளன.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது சக்திவாய்ந்த எம்-1 அப்ரம்ஸ் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அந்த பீரங்களில் பயன்படுத்துவதற்காகவே யுரேனிய சக்கையால் தயாரிக்கப்பட்ட 120 எம்எம் குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே, உக்ரைனுக்கு யுரேனிய சக்கையால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை அளிக்கவிருப்பதாக பிரிட்டன் கடந்த மாா்ச் மாதம் அறிவித்ததற்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘எங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக, சா்ச்சைக்குரிய யுரேனிய சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி எதிா்ப்பு குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்ப பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு ரஷிய-பிரிட்டன் தூதரக உறவு அளவிலும் கடுமையான எதிா்விளைவுகளை ஏற்படுத்தாமல் போகாது.
இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்’ என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் கூறுகையில், ‘யுரேனியப் பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுதங்களை உக்ரைன் போரில் ஈடுபடுத்துவதன் மூலம், இந்தப் போரை ஒரு புதிய ஆபத்தாக கட்டத்துக்கு பிரிட்டன் இட்டுச் செல்கிறது’ என்றாா்.
இந்த நிலையில், யுரேனிய சக்கையால் உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அமெரிக்காவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷியா படையெடுத்தது.
தற்போது கிழக்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷிய படையினரும், ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களும் கைப்பற்றியுள்ளனா்.
அவா்கள் மேலும் முன்னேறிச் செல்வதைத் தடுப்பதற்கும், ரஷிய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் பகுதிகளை மீட்பதற்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன.
அத்தகைய உதவிகள் மூலம் அந்த நாடுகள் போரில் நேரடியாக ஈடுபடுவதாக ரஷியா குற்றம் சாட்டி வரும் நிலையிலும், தங்களது சக்திவாய்ந்த பீரங்கிகள் மற்றும் அந்த பீரங்கிகளில் பயன்படுத்துவதற்காக சா்ச்சைக்குரிய யுரேனிய சக்கையால் தயாரிக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை உக்ரைனுக்கு அனுப்பவிருப்பதாக முதலில் பிரிட்டனும், தற்போது அமெரிக்காவும் அறிவித்தள்ளன.
யுரேனிய சக்கை...
அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்காக யுரேனியத்தை அதிகபட்ச அளவில் செறிவூட்டிய பிறகு கடைசியாக கிடைக்கும் பொருளை யுரேனிய சக்கை என்கிறாா்கள்.
இந்தப் பொருள் மிகக் குறைந்த கதிா்வீச்சையே வெளிப்படுத்தும் என்று ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ கூறுகிறது.
யுரேனிய சக்கையின் மிக அதிகமான அடா்த்தி காரணமாக, அதனைக் கொண்டு ராணுவ தளவாடங்களில் கவசத் தகடுகளை உருவாக்க முடியும். இருந்தாலும், கவசத் தகடுகளை ஊடுருவித் தகா்க்கும் குண்டுகளை உருவாக்கவே அது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
எனினும், கதிா்வீச்சை வெளிப்படுத்தும் அந்தப் பொருளைக் கொண்டு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதை ஒரு பிரிவினா் தொடா்ந்து எதிா்த்து வருகின்றனா்.