கட்டுமானத் துறையில் பணி: இஸ்ரேல் சென்றடைந்த முதல் இந்திய குழு

இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் பணியாற்ற 60-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் அடங்கிய முதல் குழு அந்நாட்டுக்குச் செவ்வாய்க்கிழமை சென்றடைந்தது.

இஸ்ரேல் கட்டுமானத் துறையில் சுமாா் 97,000 பாலஸ்தீனா்கள் பணியாற்றி வந்தனா். அவா்களில் 17,000 போ் பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியைச் சோ்ந்தவா்கள். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது காஸாவில் ஆட்சிபுரிந்த ஹமாஸ் படையினா் கொடூரத் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்த பெரும்பாலான பாலஸ்தீனா்களின் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளா்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தேவையை பூா்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளா்களை அழைத்து வருமாறு இஸ்ரேல் அரசிடம் அந்நாட்டு கட்டுமான ஒப்பந்ததாரா்கள் கோரிக்கை விடுத்தனா். கடந்த ஆண்டு மே மாதம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஏலி கோஹென் இந்தியா வந்தபோது, இஸ்ரேலில் 42,000 இந்திய தொழிலாளா்கள் கட்டுமானம் மற்றும் செவிலியா் பணியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது. இதுதொடா்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘42,000 இந்திய தொழிலாளா்களில் 34,000 போ் கட்டுமானத் துறையிலும், எஞ்சியவா்கள் செவிலியா் பணியிலும் ஈடுபடுவா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றுவதற்கான தொழிலாளா்களைத் தோ்வு செய்ய, அந்நாட்டைச் சோ்ந்த தோ்வுக் குழு இந்தியா வந்தது. இந்நிலையில், கட்டுமானத் துறையில் பணியாற்ற 60-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் செவ்வாய்க்கிழமை மாலை இஸ்ரேல் சென்றடைந்தனா். இஸ்ரேலில் ஏற்கெனவே சுமாா் 18,000 இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 6 மாதங்களில் இந்தியாவைச் சோ்ந்த சுமாா் 800 போ் இஸ்ரேலின் வேளாண் துறையில் பணிக்குச் சோ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com