ஈரானை நேரடியாகத் தாக்குவோம்! இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரானை நேரடியாகத் தாக்குவோம்! இஸ்ரேல் எச்சரிக்கை

தங்களை ஈரான் தாக்கினால், அந்த நாட்டின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

அந்த நாட்டுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையிலான காஸா போர் பிராந்தியப் போராக உருவெடுக்கும் அபாயம் நிலவிவரும் சூழலில் இஸ்ரேல் இவ்வாறு எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸிலுள்ள ஈரான் தூதரகத்தில் இந்த மாதம் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் தளபதிகள்.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், அந்த நாடுதான் ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் ஈரானில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தது.

இந்த நிலையில், முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் நிறைவையொட்டி ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தொலைக்காட்சியில் புதன்கிழமை உரையாற்றினார்.

அப்போது அவர், "வெளிநாடுகளிலுள்ள ஈரான் தூதரகங்களில் தாக்குதல் நடத்தினாலும் அது ஈரான் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பாகும். எனவே, அதற்காக இஸ்ரேல் அரசை தண்டித்தே தீருவோம்' என்றார்.

இதற்குப் பதிலளித்து, "எக்ஸ்' ஊடகத்தில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரான் எல்லையிலிருந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். அத்தகைய சூழலில் ஈரான் மீது நாங்கள் நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாடு உருவாவதை ஈரான் ஏற்கவில்லை. இதன் காரணமாக, இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்துவரும் ஈரான், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் அகற்றப்படவேண்டும் என்று கூறிவருகிறது.

இஸ்ரேலுக்கு எதிராகச் சண்டையிடும் ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்துவருகிறது. அந்தக் குழுக்களில் ஒன்றான ஹமாஸ் அமைப்பினர், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அதற்குப் பதிலடியாக அவர்களைக் குறிவைத்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தப் போரில் ஹமாஸýக்கு ஆதரவாக அண்டை நாடான லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் நிலைகளில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இவர்களும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதப் படையினர்.

காஸா போர் தொடங்கியதற்குப் பிறகு இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த மோதலின் ஒரு பகுதியாக லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இது தவிர, போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் சார்புடைய சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். இவர்களுக்கும் ஈரான் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்துவருகிறது.

இவ்வாறு மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மறைமுக மோதல் நீடித்துவந்த நிலையில், டெஹ்ரானிலுள்ள ஈரான் தூதகரகத் தாக்குதலுக்குப் பிறகு அந்த இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் அபாயம் அதிகரித்துள்ளதை இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com