சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

சர்ச்சைக்குரிய ருவாண்டா மசோதா: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் முன்வைத்த மசோதாவில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்திவந்ததால் அதை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்துவந்தது.

இந்த நிலையில், அந்த வலியுறுத்தல்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வளமான வாழ்வாதாரத்துக்காக பிரிட்டனில் அடைக்கலம் தேடி ஏராளமானோர் வருவது தொடர்ந்து வருகிறது.

அவ்வாறு அடைக்கலம் தேடும் அகதிகளை பணத்துக்காக சட்டவிரோதக் கும்பல் ஆபத்தான முறையில் பிரிட்டனுக்கு கடத்திவரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு உரிய ஆவணங்களின்றி அடைக்கலம் தேடி வருவோரை ருவாண்டாவுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கும் திட்டத்தை கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்தார்.

அடைக்கலம் கோரி அகதிகள் அளிக்கும் விண்ணப்பங்களை சரிபார்த்து, அவர்களுக்கு புகலிடம் அளிப்பது குறித்து பிரிட்டன் முடிவு செய்யும்வரை அவர்கள் ருவாண்டா தலைநகர் கிகாலியிலுள்ள தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பார்கள் எனவும், அதுவரை அவர்கள் அனைவரும் சட்டவிரோத அகதிகளாகவே கருதப்படுவர் எனவும் அவர் கூறினார்.

சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தை தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் தலைமையிலான அரசும் முன்னெடுத்துச் செல்கிறது.

எனினும், அகதிகள் நல உரிமை அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் அமைப்பினர் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அகதிகளை ஏற்றி ருவாண்டா செல்லும் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் மனித உரிமை நீதிமன்றமும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்தது. (ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகினாலும், ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பில் இன்னமும் உறுப்பு நாடாக உள்ளது).

அதைத் தொடர்ந்து, அரசின் சர்ச்சைக்குரிய இந்தத் திட்டம் சட்டவிரோதமானது என்று பிரிட்டன் உச்சநீதிமன்றமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

பிரிட்டனில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பினால், அவர்களை அந்த நாடு பாதுகாப்பற்ற மூன்றாவது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் என்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று அதற்கு முன்னதாக கீழமை நீதிமன்றம் கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ரிஷி சுனக் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதையடுத்து, அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கான சட்டத் தடைகளை நீக்கும் வகையிலான அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்திருந்தார்.

அதன்படி, ருவாண்டாவுக்கு அனுப்பப்படும் அகதிகள் அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை அந்த நாட்டு அரசுடன் பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் ரிஷி சுனக் தாக்கல் செய்தார். எனினும், இதில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற மேலவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிடிவாதமாக இருந்ததால் மசோதாவை நிறைவேற்றுவதில் 2 மாதங்களாக முட்டுக்கட்டை நிலவிவந்தது.

இந்தச் சூழலில், அந்த மசோதாவை நாடாளுமன்றக் கீழவையில் திங்கள்கிழமை இரவு கொண்டுவந்து நிறைவேற்றியே தீரப்போவதாக ரிஷி சுனக் அறிவித்ததைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை மேலவை உறுப்பினர்கள் கைவிட்டனர்.

அதையடுத்து அந்த மசோதாவுக்கு இருந்துவந்த தடை நீங்கவே, அது நாடாளுன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகளை அதிகாரிகளால் உடனடியாகக் கைது செய்ய முடியும். எனவே, இதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களும் தொண்டு அமைப்புகளும் வழக்கு தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை ஐரோப்பிய யூனியனும் கண்டித்துள்ளது.

தீவிர வலதுசாரி வாக்களர்களைக் கவர இந்த திட்டத்தை ரிஷி சுனக் முன்னெடுத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த திட்டத்துக்கு பெரும்பான்மை பிரிட்டன் நாட்டவர்களிடையே வரவேற்பு இல்லை என்று அண்மைக் கால கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால், இது தேர்தலில் ரிஷி சுனக்குக்கு பலன் அளிக்காது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com