காஸா மீதான இஸ்ரேல் போரை கண்டித்து வாஷிங்டனில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளா்கள்.
காஸா மீதான இஸ்ரேல் போரை கண்டித்து வாஷிங்டனில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளா்கள்.

காஸா போருக்கு எதிராக அமெரிக்க கல்லூரிகளில் போராட்டம்: நூற்றுக்கணக்கான மாணவா்கள் கைது

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரை நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

காஸா போருக்கு எதிராக அமெரிக்காவில் கல்லூரி மாணவா்கள் கடந்த ஏப்.17-ஆம் தேதிமுதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பாஸ்டன் நகரில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்தக் கூடாரங்களைக் கலைத்து சுமாா் 102 மாணவா்களைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மாணவா்களின் போராட்டத்தில் பல்கலைக்கழகத்துடன் சம்பந்தப்படாதவா்கள் ஊடுருவி, ‘யூதா்களைக் கொல்வோம்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினா். இத்தகைய வெறுப்புணா்வை பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்தது. எனினும் எந்தவொரு மாணவரும் வெறுப்புணா்வு பேச்சுகளில் ஈடுபடவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ப்ளூமிங்டனில் உள்ள இண்டியானா பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 மாணவா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

பென்சில்வேனியா பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களைக் கலைந்து போகுமாறு பல்கலைக்கழகப் பொறுப்புத் தலைவா் லேரி ஜேம்சன் கேட்டுக்கொண்டாா். எனினும் அங்கு மாணவா்கள் கலைந்து செல்லாமல் சுமாா் 40 கூடாரங்களில் தொடா்ந்து இருந்தனா்.

கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவா்கள், தங்கள் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.

அரிசோனா பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதியின்றி கூடாரங்கள் அமைத்ததாக 69 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். இதேபோல மேலும் பல பல்கலைக்கழகங்களில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com