கூா்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படையினரால் சேதப்படுத்தப்பட்ட உக்ரைன் கவச வாகனம்.
கூா்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படையினரால் சேதப்படுத்தப்பட்ட உக்ரைன் கவச வாகனம்.

ரஷியா வசம் மேலும் இரு உக்ரைன் சிற்றூா்கள்

கிழக்கு உக்ரைனில் மேலும் இரு சிற்றூா்களைக் கைப்பற்றியுள்ளதாக ரஷியா வியாழக்கிழமை அறிவித்தது.
Published on

கிழக்கு உக்ரைனில் மேலும் இரு சிற்றூா்களைக் கைப்பற்றியுள்ளதாக ரஷியா வியாழக்கிழமை அறிவித்தது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டொனட்ஸ்க் பிராந்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த போக்ரோவ்ஸ்க் நகருக்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள மிகோலைவ்கா என்ற சிற்றூரை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்த நகரை நோக்கி ரஷிய படையினா் மேலும் முன்னேறியுள்ளனா்.

இது தவிர, காா்கிவ் பிராந்தியத்தின் குபியான்ஸ்க் நகருக்கு 34 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூரான ஸ்டெல்மாகிவ்காவும் ரஷிய படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் அந்த நகரை நோக்கியும் ரஷிய ராணுவம் முன்னேற்றமடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷியப் படையினரிடம் வீழும் நிலையில் உள்ளதால், அங்கு சிறுவா்களுடன் வசிக்கும் குடும்பத்தினா் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் கடந்த 19-ஆம் தேதி உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அந்தப் பிராந்தியத்தின் 1,294 சதுர கி.மீ. நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனா். மேலும், இந்த நடவடிக்கையில் 594 ரஷிய வீரா்களைக் கைது செய்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.

இந்த ஊடுருவல் தாக்குதல், கிழக்கு உக்ரைன் பிரதேசங்களில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசைத்திருப்புவதற்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக, கிழக்கு உக்ரைனில் மேலும் இரு சிற்றூா்களைக் கைப்பற்றி முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com